பாடசாலை நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பதிவுகளை (மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதித்தல் தொடக்கம் விலகிச் செல்லுதல், கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழுவின் உறுப்பினர்கள் பாடசாலைக்கு வருகைத்தருதல் தொடக்கம் இடமாற்றம் அல்லது ஓய்வு பெறுதல்) முறையாக தற்காலப்படுத்தி பேணுதல் வேண்டும். அதற்கிணங்க கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் தொடர்பாக அதிபரின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
6.2 கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை (EMIS)
6.2.1 கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையொன்றில் உள்ளடங்க வேண்டிய தகவல்கள்
வரைபடம், காணி உறுதிப் பத்திரம் (Master plan)
பாடசாலை வரலாறு (ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலான தகவல்கள்)
மாணவர் தொடர்பான தகவல்கள்
பெற்றார் தொடர்பான தகவல்கள்
கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு தொடர்பான தகவல்கள்
பௌதீக வளங்கள் தொடர்பான தகவல்கள்
மாணவர் அடைவு தொடர்பான தகவல்கள்
வளநபர்கள்/நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள்
இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள்
பாடசாலை நிருவாகத்துடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள்
நிதி தொடர்பான தகவல்கள்
மாணவர் நலனோம்பல் தொடர்பான தகவல்கள்
ஏனையவை
6.2.2 கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையொன்றினை பேணுதல்
கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை தொடர்பான பொறுப்புகள் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை
பொருத்தமான பொறிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல்களை சேகரித்தல்
நடைமுறையிலுள்ள வசதிகளுக்கேற்ப தகவல்களை கணனி மயப்படுத்துதலும் தற்காலப்படுத்துதலும்
தகவல்களை பகுப்பாய்வு செய்தலும் தீர்மானம் மேற்கொள்ளும்போது பயன்படுத்துதலும்
தேவையான சந்தர்ப்பங்களில் தகவல்களை வழங்குதல்
சம்பந்தப்பட்ட தகவல்களை காட்சிப்படுத்துதல்
முகாமைத்துவச் செயற்பாடுகளுக்காக தகவல்களைப் பயன்படுத்துதல்
6.2.3. ஆசிரியர்களின் மனிதவள முகாமைத்துவம்
முறைசார்ந்த அமைப்பு
தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் கீழ் ஆசிரியர்களின் மனித வள முகாமைத்துவ முறைசார் அமைப்பொன்று கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம் முறைசார் அமைப்பினுள் அனைத்து அரச பாடசாலைகள், பிரிவெனாக்கள், உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பாடசாலைகள் மற்றும் பகுதியளவில் அரச மானியம் பெறும் விசேட பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் கடமைப் பரப்புக்குரியதான தகவல்கள் பேணப்பட்டு வருகின்றது.
அசிரியர்கள் தொடர்பாக நிறுவன மற்றும் நிருவாகம்சார் செயற்பாடுகளை தாமதமின்றி பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் சேவைசார் திருப்தியை உயர்த்ததுல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல் இத் தகவல் முறைமையை அறிமுகப்படுத்துவதனுடாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அச் சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்கள் தொடர்பான நான்கு தொகை மதிப்புகள் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியரதும் தனிப்பட்டக் கோவைகளின் தகவல்கள் வலயக் கல்விப் பணிமனையினூடாக இத் தரவுத் தளத்திற்கு உட்படுத்தப்படும்.
6.2.3.1 தரவுத் தளம் தொடர்பாக ஆசிரியர்களின் பொறுப்பு.
குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் ஒரு தடவையேனும் தங்களது பயனீட்டாளர் கணக்கைப் பயன்படுத்தி இம் முறைசார்ந்த தகவல் முறைமையில் உட்படுத்தப்பட்டுள்ள தனது தகவல்கள் சரியானவையா என பரீட்சித்துப் பார்த்தல்.
தனது பயனீட்டாளர் பெயர் மற்றும் அடையாளச் சொல்லை தனிப்பட்டக் கோவை வைக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிமனையில் பெற்றுக் கொள்ளுதல்.
முதல் நுழைவின் போது அடையாளச் சொல்லை மாற்றி இரகசியத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளுதல்.
தகவல்களில் தவறுகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தாமதிக்காமல் எழுத்து மூலம் சமர்ப்பித்தல்.
6.2.3.2 தரவு முறைமை தொடர்பாக அதிபரின் பொறுப்பு.
பாடசாலையின் ஆசிரியர்களின் தகவல்களை பிழையற்றதும் தனது தற்காலப்படுத்தப்பட்டதுமாக முறைமையில் காணப்படுகின்றதா என உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
இடமாற்றங்களைப் போன்றே ஆசிரியர்களின் கடமை பரப்பிற்குரிய மாற்றங்களை உடனடியாக தனது பாடசாலைக்குரிய வலயக் கல்விப் பணிமனையில் தனிப்பட்டக் கோவைக்கு பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தருக்கு கிடைக்கச் செய்தல்.
ஆசிரியர்களால் அவர்களது தகவல்களை தற்காலப்படுத்துவதற்காக வலயத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்தி சமர்ப்பித்தல்.
திருத்தங்களை முன் வைப்பதற்காக உரிய இணைப்புகளை பூரணப்படுத்தி ஒவ்வொரு மாதமும் சம்பளப் பட்டியலுடன் வேறாக நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தருக்கு சமர்ப்பித்து அது கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
(இது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 30/2019 இலக்கமுடையதும் 2019.06.07 ஆந் திகதிய சுற்றுநிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவைக்கு அமைவாக)
6.3 ஆவண முகாமைத்துவம்.
6.3.1. சம்பவத் திரட்டுப் புத்தகம்
சம்பவத் திரட்டுப் புத்தகத்தை பாடசாலையின் வரலாறு மற்றும் கடமைகள் மேற்கொள்ளப்படுகின்றமை, பாடசாலையில் இடம்பெற்ற விசேட செயற்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய பதிவாக பாடசாலையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். சம்பவத் திரட்டுப் புத்தகத்தை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். சம்பவத் திரட்டுப் புத்தகத்தை அதிபருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். தகவல்களைக் குறிப்பிடுதல் அதிபரால் மேற்கொள்ளப்படுவதோடு அதிபர் பாடசாலையில் இல்லாத போது அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதிபர் பாடசாலையை விட்டு வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் சம்பவத்திரட்டுக் குறிப்பை இடுவதனூடாக பணிப்பகிர்வு செய்யப்பட வேண்டியதோடு கடமைகளைப் பொறுப்பேற்ற நபரினால் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக குறிப்பினை இடுதல் வேண்டும். சம்பவத் திரட்டுக் குறிப்பினை எழுதும்போது ஆரம்பத்திலேயே குறிப்பு இடப்படும் திகதியை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டியதோடு இறுதியில் குறிப்பினை இட்ட நபரின் ஒப்பம், பெயர் மற்றும் பதவியை குறிப்பிட வேண்டும்.
ஒரு சம்பவத் திரட்டுக் குறிப்பை இட்ட பின்னர் அடுத்த குறிப்பினை இடுவதற்காக விடப்படும் இடைவெளியானது மேலதிக குறிப்பினை இடுவதற்கு முடியாத வகையில் இருத்தல் வேண்டும். சம்பவத் திரட்டுக் குறிப்பொன்றை மாற்றம் செய்வதோ அல்லது வெட்டிவிடுதல் அல்லது அழிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பு ஒன்றை இடும்போது தவறு ஒன்று ஏற்படுமாயின் அடுத்தாக குறிப்பொன்றை இட்டு அதனை சரி செய்தல் வேண்டும். ஒவ்வொரு பக்கமும் இலக்கமிடப்பட்டிருப்பதோடு ஒரு பக்கத்தை அகற்றி விடுவதோ புதிய பக்கமொன்றை புகுத்துவதோ செய்யக் கூடாது. ஒவ்வொரு சம்பவத் திரட்டுக் குறிப்பும் தொடரொழுங்கில் இலக்கமிடப்பட்டித்தல் பொருத்தமாகும்.
சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடுவதற்கு அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்கள்:
கல்வி அமைச்சு, மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிமனைகளில் கடமைகளின் நிமித்தம் சமுகந் தரும் பதவிநிலை உத்தியோகத்தர்கள்.
பாடசாலைக்கு கடமையினிமித்தம் சமுகமளிக்கும் சுகாதார வைத்திய அதிகாரி.
கணக்காய்வு மற்றும் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்கள்.
பிரதேச மற்றும் அரச சமாதான நிலை உத்தியோகத்தர்கள்.
சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடும் சந்தர்ப்பங்கள்:
பாடசாலையின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்குரிய விசேட சந்தர்ப்பங்கள்.
கடமையினிமித்தம் அதிபர் வெளியில் செல்லுதலும் கடமை நிறைவேற்றுதலும்.
கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் பாடசாலைக்கு நியமிக்கப்படுதல்/ இடமாற்றம்/ பதவி உயர்வு/ ஓய்வு பெறுதல்.
பாடசாலையில் விசேட பிரச்சினைகள் உருவாகும் பட்சத்தில் (திருட்டு ஒன்று இடம்பெற்றுள்ள போது, ஒழுக்காற்று பிரச்சினையொன்று உருவாகும் பட்சத்தில், திடீர் மரணமொன்று ஏற்படும் பட்சத்தில், எதிர்பாராத சுற்றாடல் பிரச்சினையொன்று).
கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்களுக்கு வீட்டிலிருந்து கடமை நிலையத்திற்கு சமுகமளித்தல், திரும்பிச் செல்லுதல், கடமையினிமித்தம் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அல்லது கடமை நிலையத்தில் வைத்து திடீர் விபத்து ஏற்படுதல்.
மாணவரோடு தொடர்புடைய விசேட நிகழ்வுகள்.
பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளும் விழாக்களும்.
பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு லீவு பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.
பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் முழு நேர கற்றல் விடுகையைப் பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.
6.3.2 மாணவர்களை அனுமதித்தல், வகுப்பேற்றம் செய்தல் மற்றும் விலக்கிக் கொள்ளுதல் (கல்வி C-32)
அனைத்து சேர்வு இடாப்புகளும் இலக்கமிடப்பட்டு பாதுகாப்பாக அதிபரின் பொறுப்பில் வைத்துக் கொள்ளுதல்.
பாடசாலைக்கு முதல் தடவையாக சேர்க்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் சேர்வு இலக்கம் வழங்குதல்.
ஒவ்வொரு மாணவரதும் மாணவர் அடையாள இலக்கமாக (பாடசாலை தொகை மதிப்பு இலக்கம் + மாணவர் சேர்வு இலக்கம்) பதிவில் குறிப்பிட வேண்டும்.
யாராவது ஒரு மாணவர் வேறு பாடசாலையிலிருந்து இப்பாடசாலைக்கு சேர்க்கப்படுவாராயின் அப் பாடசாலையின் மாணவர் விடுகைப்பத்திரத்திற்கிணங்க சேர்வு இடாப்பில் உரிய தகவல்களை குறித்தல்.
வேறு பாடசாலையிலிருந்து சேர்க்கப்படும் மாணவரது அடையாள இலக்கத்தைக் குறிப்பிடும் போது அம் மாணவர் முதல் தடவையாக அனுமதிக்கப்பட்ட பாடசாலையின் தொகைமதிப்பு இலக்கம்/ மாணவர் சேர்வு இலக்கம் குறிக்கப்படுதல் வேண்டும்.
அப் பாடசாலையிலிருந்து மாணவர் ஒருவர் விலகி வேறொரு பாடசாலைக்குச் சென்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அப்பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவாரேயானால் முன்னர் வழங்கப்பட்டிருந்த மாணவர் அடையாள இலக்கத்தையே மீண்டும் வழங்கி அம் மாணவர் தொடர்பான தகவல்களை மீண்டும் சேர்வு இடாப்பில் உட்படுத்தி அடையாள இலக்கத்தை சிவப்பு நிறத்தில் எழுதி எதிரே R எழுத்தை குறிக்க வேண்டும்.
மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றம் செய்யும் போது அம் மாணவர் சேர்வு இடாப்பை வருடாந்தம் தற்காலப்படுத்துதல் அத்தியாவசியமாகும்.
மாணவர்களின் தொடர்ச்சியான வரவின்மை தொடர்பாக சுற்றுநிருப விதிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
சேர்வு இடாப்புகளில் மிகத் தெளிவாக குறிப்புகளை இட வேண்டியதோடு இடப்படும் குறிப்புகளை மாற்றம் செய்தல் (அழிப்பதற்கான திரவத்தை பயன்படுத்துதல், கீறிவிடுதல், வெட்டிவிடுதல்) ஆகாது.
(இது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 25/2007 சுற்றுநிருப விதிகளுக்கு அமைய செயலாற்றுதல் வேண்டும்)
6.3.3 மாணவர் விடுகைப் பத்திரம் (பாடசாலையிலிருந்து விலகிச் செல்லும் சான்றிதழ்) (B 59)
மாணவர் விடுகைப் பத்திரம் அதிபராலேயே வழங்கப்படுதல் வேண்டும். அதிபர் பாடசாலையில் இல்லாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் உரிய முறையில் அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவருக்கு அது தொடர்பாக செயலாற்ற முடியும்.
மாணவர் விடுகைப் பத்திரத்தில் மாணவர் அடையாள இலக்கத்தை உட்படுத்துதல் கட்டாயமாகும்.
இது சட்ட ரீதியான ஆவணமொன்று என்பதால் அனைத்துத் தகவல்களினதும் பிழையற்ற தன்மை தொடர்பாக அதிபர் பொறுப்பினை ஏற்க வேண்டும்.
மாணவர் விடுகைப் பத்திரம் வழங்குதல் தொடர்பாக மாணவர் சேர்வு இடாப்பில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
மாணவர் ஒருவர் பாடசாலையிலிருந்து விலகிச் செல்லும் சந்தர்ப்பத்தில் பாடசாலையில் சேர்ப்பதற்கு சமுகமளித்த நபரே சமுகமளித்தல் வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பிள்ளையின் சட்ட ரீதியான பாதுகாவலர் (சட்ட ரீதியான பாதுகாவலராக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பிற்கான உரிமையை பெற்றிருந்தால் மாத்திரம்) என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தாய்/தந்தை அல்லது சட்ட ரீதியான பாதுகாவலரின் எழுத்துமூலமான கோரல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
விசேஷித்த சந்தர்ப்பங்களில் உரிய ஆவணங்களின் பிழையற்ற தன்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் மாத்திரமே மாணவர் விடுகைப்பத்திரத்தை வழங்க வேண்டும்.
விடுகைப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட பின் இடாப்பில் கையொப்பத்தைப் பெற்று திகதியைக் குறிப்பிடுதல் வேண்டும். வயது பூர்த்தியானதன் பின்னர் பாடசாலையிலிருந்து விலகிச் சென்ற ஒருவரால் விடுக்கப்படும் கோரிக்கை இதன்போது செல்லுபடியாகும்.
இரண்டாவது பிரதியொன்றுக்கான தேவையேற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரியால் சத்தியக் கடிதத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு விண்ணப்பிக்க வேண்டியதோடு வலயக் கல்விப் பணிப்பாளரின் கட்டளையின் அடிப்படையில் மாத்திரம் அதிபரால் உரிய இரண்டாவது பிரதி வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது பிரதியை வழங்கும் போது மாணவர் சேர்வு இடாப்பிலும் மாணவர் விடுகைப் பத்திரத்திலும் சிவப்பு மையினால் "இரண்டாம் பிரதி வழங்கப்படுகின்றது" என குறிப்பிட வேண்டும்.
வலயக் கல்விப் பணிமனையிலிருந்து பாடசாலைக்கு கொண்டுவரப்படும் மாணவர் விடுகைப் பத்திரத்தை வழங்குவதற்கான புத்தகங்களை பயன்படுத்துவதற்கு முன்னர் பாடசாலையிலுள்ள அடிச் சீட்டுப் பதிவில் உள்ளடக்க வேண்டும்.
மாணவர் விடுகைப்பத்திரம் வழங்குவதற்குரிய அனைத்து ஆவணங்களையும் முறையாக கோவைப்படுத்தி பாதுகாப்பாக வைத்தல் வேண்டும்.
(இது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 39/2008 சுற்றுநிருப விதிகளுக்கு அமைய செயலாற்றுதல் வேண்டும்)
6.3.4 மாணவர் வரவு இடாப்பு (கல்வி C 31)
வரவு இடாப்பினை முறையாகவும் நேர்த்தியாகவும் பேணுதல் வகுப்பாசிரியர்களின் பொறுப்பாகும்.
மாணவர்களின் பெயர்களை வரவு இடாப்பில் குறிப்பிடும் போது ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெயர்களை வெவ்வேறாக எழுத வேண்டியதோடு, அப்படியெனில் மாணவர் சேர்வு இலக்க ஒழுங்குமுறைக்கு இணங்க எழுத வேண்டும்.
தினசரி வரவு இடாப்பில் வரவைக் குறித்தலும் அதனை பிழையற்றதாகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்துதலும் பேணுதலும் வகுப்புப் பொறுப்பு ஆசிரியரின் பொறுப்பாவதோடு அப் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு அதிபரைச் சார்ந்ததாகும்.
ஒரு நடப்பு வருடத்திற்கென பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின் பாடசாலைக்கு சேரும் மாணவர் ஒருவரை சேர்க்கப்பட்ட தினத்திலேயே வரவு இடாப்பில் பெயரை எழுதி வரவைக் குறிப்பதோடு அதற்கு முந்திய தினத்தை சிவப்பு பேனையினால் கோடு கீறி வெட்டிவிடுதல் வேண்டும்.இங்கு குறிப்பிடப்படுகின்ற சேர்க்கப்படும் மற்றும் விலக்கிக் கொள்ளும் திகதிகள் மாணவர்களை சேர்த்தல் மற்றும் விலக்கிக் கொள்ளுதல் தொடர்பான இடாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே இருத்தல் வேண்டும்.
வரவு இடாப்பில் மாணவர்களின் வரவை தினசரி, வாராந்த, மாதாந்த மற்றும் வருடாந்த சுருக்கத்தைத் தயாரித்தல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
வருகைத் தராத மாணவர் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்துதலும் மாணவர்களின் வரவின்மையைக் குறைப்பதற்காகவும் தேவையான நடவடிக்கை எடுத்தலுக்கும் வரவு இடாப்பில் காணப்படும் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வருட இறுதியில் முழுத் தொகையை தயாரித்து பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தருக்கு வழங்குதல் கட்டாயமாகும். அதன் மேற்பார்வைக்கு அதிபர் கவனஞ் செலுத்தல் வேண்டும்.
தினசரி வரவுச் சுருக்கத்தை இரண்டாம் பாடவேளையின் ஆரம்பத்திற்கு முன்னர் அதிபர் அலுவலகத்திற்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்பினதும் மாணவர் வரவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மொத்த எண்ணிக்கைக்கான புத்தகமொன்றை பேண வேண்டும்.
மாணவர் வரவு இடாப்பின் இறுதிப் பக்கத்திலுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
இது பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணமென்பதால் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
மாணவர் வரவு இடாப்புகளில் மிகத் தெளிவாக குறிப்புகளை இட வேண்டியதோடு இடப்படுகின்ற குறிப்புகளை மாற்றம் செய்தலை (அழிப்பதற்கான திரவத்தை பயன்படுத்துதல், கீறிவிடுதல், வெட்டிவிடுதல்) மேற் கொள்ளுதல் ஆகாது.
ஒவ்வொரு வகுப்பினதும் மாணவர் வரவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மொத்த எண்ணிக்கைக்கான புத்தகமொன்றை பேண வேண்டும்.
6.3.5 கல்விசார்/கல்விசாரா பணிக்குழுவினரின் வரவுக் கையொப்பப் பதிவு (பொது 18)
கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழுவினருக்காக வெவ்வேறான வரவு இடாப்பினை பேணுதல் வேண்டும்.
விசேட கடமை நேரங்களுக்கு உரித்தான காவலாளிகள் /விடுதிகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் போன்ற பதவிகளுக்காக வெவ்வேறாக வரவு கையொப்ப இடாப்பு பேணுதல் வேண்டும்.
வரவு கையொப்ப இடாப்பில் முதல் பக்கத்தில் பெயர், இலக்கம் மற்றும் மாதிரிக் கையொப்பம் என்பனவற்றை (சுருக்க மற்றும் நெடும் கையொப்பம்) உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.)
வரவு கையொப்ப இடாப்பில் கோடுகளுக்கு இடையில் இடைவெளி விடப்படக் கூடாது.
வருகைத் தரும் போதும் வெளியேறும் போதும் கட்டாயமாக கையொப்பமிடப்பட வேண்டியதோடு நேரத்தையும் உரிய நபருக்குரிய இலக்கத்தையும் பிழையின்றி குறித்தல் வேண்டும்.
சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க உரிய நேரத்தில் கையொப்ப இடாப்பை நிறைவு செய்து வருகைத் தராத நபர்களின் பெயர்கள் சிவப்பு மையினால் எழுதப்பட வேண்டும்.(முதல் நிறைவு பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு உரிய நேரமாவதோடு இரண்டாம் நிறைவு முதலாம் நிறைவிலிருந்து 15 நிமிடங்களின் பின்னராகும். மூன்றாவது நிறைவு பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு உரிய நேரத்திலிருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னராகும்.) அன்றாடம் வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கையைக் குறித்து வைத்தல் வேண்டும்.
தினசரி வரவு இடாப்பில் மாற்றம் செய்தல், கீறிவிடுதல் அல்லது அழிப்பதற்கான திரவத்தை பயன்படுத்தக் கூடாது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கொடுப்பனவு வழங்கப்படுகின்ற தற்காலிக ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக வெவ்வேறாக கையொப்ப இடாப்பினை பயன்படுத்த வேண்டும்.
அனைத்து வரவு இடாப்புகளையும் தினசரி பரிசீலித்து உரிய முறையில் நிறைவு செய்தல் அதிபர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடமை நேரத்தினுள் குறுகிய காலத்திற்கு பாடசாலைக்கு வெளியே கடமை நடவடிக்கைக்காக வெளியில் செல்லும் போது குறிப்பினை இடுவதற்காக வெளியில் செல்வதற்கான பதிவு ஒன்றை பேணுதல் வேண்டும்.
கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழவினருக்காக கல்வி தற்காலப்படுத்தி பேணுதல் வேண்டும்.
C-31 இடாப்பினை அச்சிடப்படட்ட வரவு கையொப்ப இடாப்பு (பொது 18) இல்லாதவிடத்து தற்காலிக தீர்வாக CR புத்தகமொன்றைப் பயன்படுத்தி உரிய படிவத்திற்கிணங்க தயாரித்து பக்கங்களை இலக்கமிட்டு எல்லா பக்கத்திலும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பதவி முத்திரை வைத்து காரணத்தைக் குறிப்பிட்டு சம்பவத் திரட்டுக் குறிப்பொன்றை இடுவதன் பின்னர் பயன்படுத்த முடியும். இருப்பினும் அச்சிடப்பட்ட உரிய படிவத்தைக் கொண்ட இடாப்பு கிடைக்கப்பெற்ற பின் இந்த CR புத்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
விரல் அடையாள இயந்திரத்தைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் வரவு கையொப்ப இடாப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்.
6.3.6 லீவு பெற்றுக் கொள்ளுதலும் லீவு இடாப்பும்.(பொது 190)
லீவு பெற்றுக் கொள்ளும் போது பொது 125 படிவத்தை முறையாக பூர்த்தி செய்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவசர சந்தர்ப்பங்களில் லீவு பெற்றுக் கொள்ளும் போது வருகைத் தராத தினத்தை உள்ளடக்கிய தந்தி/தொலைப் பேசி தொடர்பு/வேறு முறையியலினூடாக அதிபருக்கு அறிவிக்க வேண்டியதோடு இது தொடர்பான குறிப்பினை இடுவதற்காக வேறான ஒரு புத்தகத்தை பாடசாலையில் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் மீண்டும் கடமைக்கு சமுகமளித்த பின் உடனடியாக முறையான லீவு விண்ணப்பத்தினூடாக அந்த லீவை அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
கல்விசார் அல்லது கல்விசாரா பணிக்குழுவின் பணியாளர் ஒருவர் லீவு அனுமதித்துக் கொள்ளாமல் அறிவிக்காது கடமைக்கு சமுகமளிக்காத சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.
கல்விசார் அல்லது கல்விசாரா பணிக்குழுவினருக்கு வெவ்வேறாக லீவு இடாப்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
வரவு இடாப்பை அடிப்படையாகக் கொண்டு லீவு இடாப்பை தயாரித்துக் கொள்ள வேண்டியதோடு ஒரு நபருக்கு ஒரு பக்கம் வீதம் வேறாக்கி லீவினைக் குறிக்க வேண்டும்.
இதன்போது உத்தியோகத்தரின் பெயர், பதவி, முதல் நியமனத் திகதி மற்றும் கடந்த மூன்று வருடங்களில் பெற்றுக் கொண்ட லீவுகளின் சுருக்கத்தை குறிக்க வேண்டியதோடு வசதி கருதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கத்தை குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.
லீவு பெற்றுக் கொண்ட தினங்கள்/லீவு பெற்றுக் கொண்டமைக்கான காரணம் என்பன குறிப்பிடப்பட வேண்டியதோடு அனுமதித்துக் கொண்டுள்ள லீவு வகைகளுக்கு இணங்க லீவு இடாப்பில் உரிய கோட்டில் வெவ்வேறாக தகவல்களை குறிக்க வேண்டும்.
குறுங்கால லீவு விண்ணப்பத்திற்காகவும் குறிப்பதற்காகவும் வேறான பதிவினை பேணுதல் வேண்டும்.
வேறு பாடசாலைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தற்காலிக இணைப்பு செய்யப்பட்டிருக்கும் கல்விசார்/கல்விசாரா பணிக்குழுவின் அனைவரதும் லீவு விபரங்களை கல்வி B100 மூலம் மாதாந்தம் சம்பளம் பெறும் நிறுவனத்திற்கு/பாடசாலைக்கு வழங்க வேண்டும்.
வருடாந்தம் உரித்து லீவுகளுக்கு மேலதிகமாக லீவு பெற்றுக் கொள்ளும் போது (B100 படிவத்தின் மூலம்)சம்பளமற்ற லீவு விபரத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.
அதிபர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரால் லீவு இடாப்பை தொடர்ச்சியாக மேற்பார்வை செய்து கையொப்பமிடுதல் வேண்டும்.
இடமாற்றம் பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் வரை பெற்றுக் கொண்டுள்ள அனைத்து லீவு தொடர்பான விபரங்களின் சுருக்கமொன்றை கல்வி B100 மூலம் புதிய சேவை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.
லீவு இடாப்பை தற்காலப்படுத்திப் பேணுவதோடு வருடாந்தம் மொத்தம் கூட்டி பின்னர் அதிபர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரால் ஒவ்வொரு பக்கத்திலும் கை - யொப்பமிடுதல் வேண்டும்.
பிந்தி வருகைத் தருவதற்காக வேறான பதிவினை பேணுவதோடு முதல் அரை மணித்தியாலத்தில் பிந்தி வருகைத் தந்த 03 தடவைக்காக 2 நாள் வீதமும் அந்த நேரத்தின் பின் பிந்தி வருகைத் தரும் ஒவ்வொரு தடவைக்கும் ½ நாள் வீதம் லீவு வழங்க வேண்டும்.
6.3.6.1 வெளிநாட்டு லீவுக்காக விண்ணப்பித்தல்
தனிப்பட்ட வெளிநாட்டு லீவு கோரி விண்ணப்பிக்கும் போது 03 மாதங்கள் வரை குறுகிய கால அடிப்படையிலான லீவு கோருவதோடு தொழில் அல்லது கற்கை செயற்பாடுகளுக்காக நீண்ட கால லீவு கோரி விண்ணப்பிக்க முடியும்.
பணிக்குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு லீவு கோரி விண்ணப்பிக்கும் போது பொது 126 படிவத்தில் லீவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அதன்போது:
லீவு விண்ணப்பக் கடிதம்
சேவையில் நிரந்தரப்படுத்தப்பட்டக் கடிதம்
பதில் கடமை நிறைவேற்றல் கடிதம்
வருடத்தில் மீதியாக உள்ள லீவு
உரிய பின்னிணைப்பு
தேசிய அடையாள அட்டை / வெளிநாட்டுக் கடவுச் சீட்டின் போட்டோ பிரதியொன்று.
தனிப்பட்ட கோவை அறிக்கை
வெளிநாட்டு லீவுக்காக விண்ணப்பிக்கும்போது பதில் கடமை நிறைவேற்றுதல் தொடர்பாக அதிபரின் சிபாரிசு அத்தியாவசியமாகும்.
கற்கைச் செயற்பாடுகளுக்காக இருப்பின் கல்வியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் கல்வி நிறுவனத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்புக் கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தில் செல்லும் நாட்டின் தொழில் வழங்கும் நிறுவனத்தில் தொழிலுக்காக செலவிடும் தினங்களின் எண்ணிக்கையுடன் வழங்கப்படும் நியமனக் கடிதம், அக் காலத்தில் பதில் கடமை நிறைவேற்றல் கடிதம் மற்றும் அரசாங்கத்திற்கு அறவிடப்பட வேண்டிய அனைத்து பணத் தொகையையும் மீளச் செலுத்தியதாக உரிய பற்றுச்சீட்டின் பிரதி அல்லது கடிதத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக் வேண்டும்.
தேசிய பாடசாலையொன்று எனின் வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நிரல் கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாகாண பாடசாலையொன்று எனின் வலய,மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணக் கல்விச் செயலாளர் ஊடாக மாகாண ஆளுனருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நீண்ட கால லீவை திருத்தம் செய்யும் போது கீழ்க் காணப்படும் ஆவணங்களை அதிபர். வலய மற்றும் மாகாண சிபாரிசுகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
உத்தியோகத்தரின் கோரல் கடிதம்.
உரிய தினங்கள் உறுதிப்படுத்தப்படும் வகையில் வெளிநாட்டுக் கடவுச் சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
தொழில்/கல்வி நிறுவனத்தில் தொழில்/ பாடநெறியின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
வெளிநாட்டு லீவைக் கணக்கிடுதல்
சமையோசித லீவைக் கணக்கிடும் போது வார இறுதி இரண்டு நாட்கள் மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து கணக்கிடல்.
பாடசாலை நடாத்தப்படும் காலத்தினுள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்லும் போது அந்த லீவு காலத்திற்கு கணக்கிடப்படும் வார இறுதி விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறைகள் சம்பளமற்ற லீவாக கணக்கிடப்படும்.
பாடசாலை விடுமுறை காலத்தினுள் வெளிநாடு சென்றிருக்கும் போது அது சம்பளத்துடனான லீவாகக் கருதப்படும்.
சம்பளமற்ற லீவு காலத்தினுள் சனி,ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் சம்பளமற்ற லீவாகக் கருதப்படும்.
தனிப்பட்ட, கற்கை அல்லது தொழில் பணிகளுக்காக 01 வருடத்திலிருந்து 05 வருடம் வரை வெளிநாட்டு லீவு பெற்றுக் கொள்ளும்போது அந்த முழுக் காலமும் சம்பளமற்ற லீவாக கருதப்படும்.
மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுதல்
இணைக்கலைத்திட்ட மற்றும் புறகிருத்தியச் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் தேசிய பாடசாலையெனின் வலய மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நிரல் கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாகாண பாடசாலையெனின் வலய மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நிரல் கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பாடசாலை கழகங்கள் ஊடாக வெளிநாட்டு போட்டிகளுக்கு பங்கேற்கும் சந்தர்ப்பங்களில் அவ்வாறு பங்கேற்பதற்கு அழைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை மற்றும் பங்கேற்கும் ஆசிரிய ஆசிரியைகளைத் தெரிவு செய்து கொள்ளும் அடிப்படை மற்றும் அதற்காக நிதி பெற்றுக் கொள்ளும் விதம் தொடர்பாக தெளிவான விபரமொன்றை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தனிப்பட காரணங்களின் அடிப்படையில் மாணவர்கள் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பங்களில் தேசிய பாடசாலையெனின் உரிய படிவத்தை பூரணப்படுத்தி அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக நிரல் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாகாண பாடசாலையெனின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் H/R/D//EQD/2002/26 எனும் இலக்கமுடைய சுற்று நிருபத்திற்கிணங்க செயலாற்ற வேண்டும்.
6.3.6.2 குறுங் கால லீவு
கல்விசார் பணிக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு நாளில் ஒரு மணித்தியாலம் வீதமும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு நாளில் 1½ மணித்தியாலம் வீதம் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் குறுங்கால லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
குறுங்கால லீவுப் பதிவில் குறித்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6.3.6.3 அரை நாள் லீவு
கடமைக்கு சமுகமளித்த பின் தினசரி சேவை மணித்தியாலங்களில் அரைப் பகுதி பணியாற்றிய பின்னரே அரை நாள் லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
6.3.6.4 சமயோசித லீவு
ஒரு தடவையில் 6 நாட்களுக்கு மேற்படாத வகையில் ஒரு வருடத்தில் 21 நாட்கள் சமயோசித லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறு இருப்பினும் தனது திருமணத்திற்காக 14 நாட்கள் வரை லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
6.3.6.5 சுகயீன லீவு
2 நாட்களுக்கு மேல் சுகயீன லீவு பெற்றுக் கொள்ளும் போது பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரிடமிருந்து வைத்திய சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
6 நாட்கள் வரையான சுகயீன லீவை தனது சமயோசித லீவில் குறைத்துக் கொள்ள முடியும்.
நீண்ட காலத்திற்கு லீவு தேவைப்படும். சுகயீனத்தின் போது தாபனக் கோவை விதிகளுக்கு அமைவாக செயலாற்ற வேண்டும்.
6.3.6.6 காலங் கடந்த ஓய்வு லீவு.
நடப்பு வருடத்தில் ஒய்வு லீவு நிறைவு பெறும் பட்சத்தில் வைத்திய சான்றிதழினூடாக உறுதிப்படுத்தப்படும் சுகயீன காரணங்களுக்காக முந்திய வருடத்தின் லீவு காலங் கடந்த லீவாக பெற்றுக் கொள்ளும் உரித்து உண்டு.
முந்திய வருடத்தின் ஈடு செய்ய முடியாத பட்சத்தில் தனது முந்திய சேவை காலத்தினுள் அண்மித்த 02 வருடங்களில் பெற்றுக் கொள்ளாது மீதப்படுத்திக் கொண்டுள்ள சுகயீன லீவினை சம்பளத்துடனான காலங் கடந்த லீவாக பெற்றுக் கொள்வதற்கு உரித்துண்டு.
வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாகவே காலங் கடந்த லீவு அனுமதிக்கப்படும்.
6.3.6.7 பிரசவ லீவு
குழந்தை உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு பிரசவத்திற்காகவும் பாடசாலை நடாத்தப்படும் நாட்களில் 84 நாட்கள் சம்பளத்துடனான லீவு பெற்றுக் கொள்ள முடியும். (குழந்தை உயிருடன் பிறக்கும் பிரசவமென கருதப்படுவது குழந்தை பிறந்து 06 வாரங்களுக்கு மேல் உயிருடன் இருக்கும்போதாகும்)
பிரசவ லீவை அனுமதிக்கும்போது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதியொன்றோ அல்லது வைத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தை இறந்து பிறந்த பிரசவமெனின் 42 நாட்கள் சம்பளத்துடனான லீவு பெற்றுக் கொள்வதற்கு உரித்துண்டு. (குழந்தை இறந்து பிறந்த பிரசவமென கருதப்படுவது பிரசவத்தின் போது அல்லது பிரசவம் நிகழ்ந்து 06 வாரங்களில் குழந்தை இறந்து விடும் சந்தர்ப்பத்திலாகும்)
குழந்தை இறந்து பிறந்த பிரசவமெனின் இறப்புச் சான்றிதழ் பிரதி அல்லது வைத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தையைப் பராமரிப்பதற்காக தொடர்ந்து லீவு கோரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 84 நாட்கள் (அனைத்து அரசாங்க விடுமுறைகள் உட்பட சனி மற்றும் ஞாயிறு தினங்கள்)அரைச் சம்பள லீவும் மேலும் லீவு கோரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 84 நாட்கள் சம்பளமற்ற லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
வைத்திய காரணங்களின் அடிப்படையில் தேவையெனின் பிரசவத்திற்கு முன் 02 வாரங்களுக்குக் குறையாத காலத்திற்கு லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த லீவு பிரசவ லீவு 84 ற்கு உட்பட்டதாக கணக்கிடப்பட வேண்டும்.
6.3.6.8 தந்தையருக்கான லீவு
தனது மனைவிக்கு குழந்தை பிரசவம் நிகழ்ந்து 04 வாரங்களுக்குள் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு தந்தையருக்கான லீவை கோர முடியும்.
இதன் போது தொடர்ச்சியாக அல்லது இடைக்கிடை உச்ச தினங்கள் 03 வரை லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கென திருமண சான்றிதழ் மற்றும் வைத்திய சான்றிதழ் அல்லது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
6.3.6.9 விசேட லீவுகள் (இஸ்லாமிய மதம்)
இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு தனது கணவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் இத்தா மதக் கடமைகளை அனுசரிப்பதற்காக 04 மாதங்களும் 10 நாட்களும் லீவு உரித்தாகும்.
விவாக ரத்து செய்து கொண்ட இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் 03 மாதங்களுக்கான விசேட லீவு பெற்றுக் கொள்ளும் உரித்துடையவராவார்.
இந்த லீவுகள் வழங்கப்படுவது தனது முழு சேவைக்காலத்தினுள் மீதப்படுத்திக் கொண்ட சுகயீன லீவை ஈடு செய்து சம்பளத்துடனான லீவாகவும் அந்த நாட்கள் நிறைவடைந்த பின்னர் அதற்கு மேலதிகமாக லீவு பெறும் பட்சத்தில் அந் நாட்களுக்கான லீவு சம்பளமற்ற லீவாகவும் கணக்கிடப்பட்டேயாகும்.
6.3.6.10 இளைப்பாறுதலுக்கு முந்திய லீவு
அரச சேவையில் ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் அண்மித்த 03 வருடங்களில் கணக்கிடப்படும் அரசாங்க வேலை நாட்களுக்கு சமனாக மீதப்படுத்திக் கொண்ட லீவு அவர்/அவளுக்கு இருக்குமேயானால் உத்தியோகத்தருக்கு 03 மாதங்களுக்கு மேற்படாது இளைப்பாறுதலுக்கு முந்திய லீவை பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறு அண்மித்த 03 மாதக் காலத்தினுள் கணக்கிடப்படும் அரசாங்க வேலை நாட்களுக்கு சமனாக மீதப்படுத்திக் கொண்ட லீவு இல்லையெனின் அவரால் மீதப்படுத்திக் கொண்டுள்ள லீவுகளின் எண்ணிக்கைக்கு சமனான வேலை செய்யும் நட்களின் எண்ணிக்கையை ஓய்வுக்கு முந்திய லீவாக பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் போது 2007.01.01 ஆந் திகதியிலிருந்து மீதப்படுத்திக் கொண்ட சமயோசித, ஓய்வு/ சுகயீன லீவினை இதற்காக உரியதாகக் கொள்ள முடியும் என்பதோடு 2006 ஆம் ஆண்டில் மீதப்படுத்திக் கொண்ட லீவினையும் உரித்தாக்கிக் கொள்ள முடியும்.
இந்த லீவானது வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
6.4 கோவைகளைப் பேணுதல்
6.4.1 மாணவர்களின் கோவைகள்
ஒவ்வொரு மாணவருக்காகவும் தனிப்பட்ட கோவையொன்றை பேணுவதோடு அதில் கீழ்க் குறிப்படப்பட்டுள்ள ஆவணங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ்.
வேறு பாடசாலையிலிருந்து வருகைத் தந்த மாணவராயின் மாணவர் விடுகைப் பத்திரம்.
சுட்டெண், அனுமதிக்கப்பட்ட திகதி தயாரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவம். (பெற்றாரின் தகவல்கள், வதிவிடம்)
இதற்கு மேலதிகமாக மாணவரது சுகாதார மற்றும் போஷணை தொடர்பான தகவல்கள், வெற்றிகள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் மாணவர் தொடர்பான விசேட தேவைகள் போன்ற தகவல்களை மாணவரது தனிப்பட்ட கோவையில் உள்ளடக்கலாம்.
6.4.2 பணிக்குழுவினருக்கான தனிப்பட்ட கோவைகள்.
கல்விசார்/கல்விசாரா பணிக்குழுவினருக்கான தனிப்பட்ட கோவையொன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய தகவல்கள்:
தனிப்பட்ட தகவல் படிவம்/சுய விபர அறிக்கை (கல்வி, தொழிற்றகைமை, நிபுணத்துவத்தைக் காட்டும் துறைகள்)
கல்வி மற்றும் தொழில் சான்றிதழ்களின் பிரதிகள். வருடாந்த பணிப்பகிர்வு ஆவணங்கள்.
செயலாற்றுகை அறிக்கை,படியேற்ற அறிக்கை.
லீவு விபரங்கள் (வெளிநாட்டு, கற்கை, சுகயீன லீவுக்கான வைத்திய சான்றிதழ்கள்,சம்பளமற்ற லீவு, முன்னர் சேவையாற்றிய சேவை நிலையங்களில் லீவு....)
சம்பள பறிமாற்ற கடிதம்.
உயர்வு
பாராட்டுகள்,
குற்றச்சாற்று மற்றும் கண்டித்தல்
சேவை விபரம்
ஓய்வு பெறும் திகதி மற்றும் விதவைகள் அனாதைகள் இளைப்பாற்றுச் சம்பள இலக்கம்.
பயிற்சிகள் (உள்நாட்டு/வெளிநாட்டு).
ஆசிரியர்களால் கடமைக்குரியதாக வெளி நபர்களுக்கு சமர்ப்பிக்கப்படும் கடிதங்கள்/ விண்ணப்பங்கள்/ அறிக்கைகள் அதிபரால் சமர்ப்பிக்க வேண்டியதோடு அவற்றின் பிரதிகளை தனிப்பட்ட கோவைக்கு உட்படுத்த வேண்டும்.
கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இலக்கமிட்டு வைப்பதோடு தற்காலப்படுத்தி பாதுகாப்பாக பேணுதல் வேண்டும்.
பதவி உயர்வுக்காக தொழில் மீளாய்வை மேற்கொண்டு பின்னர் அந்த அறிக்கையின் பிரதியொன்றை உள்ளடக்க வேண்டும்.
6.4.3 வெற்றிகள் தொடர்பான பதிவுகள்
கோட்ட, வலய, மாகாண, தேசிய மற்றும் சருவதேச போட்டிகளில் மாணவர்கள் சுவீகரித்துக் கொள்ளும் அனைத்து வெற்றிகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய முறையான பதிவு ஒன்றை பேணுதல் வேண்டும்.
6.4.4 மாணவர்கள் வெளியில் செல்வதற்கான பதிவுகள்
பாடசாலை நேரங்களில் மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியில் செல்வதைக் குறிப்பதற்காக வெளியில் செல்வதற்கான பதிவு ஒன்றை பேணுதல் வேண்டும்.
பல்வேறு இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள், சுகயீனம் /அவசர நிலைமைகளின் போதும் வேறு விசேட சந்தர்ப்பங்களின் போதும் அதிபரின் அனுமதியுடன் பாடசாலையிலிருந்து வெளியில் செல்ல முடியும்.
சுகயீனம் அல்லது அவசர நிலைமைகளின் போது பாடசாயிலிருந்து வெளியில் செல்லும் போது திகதி, வெளியில் செல்வதற்கான காரணம், மாணவரின் பெயரும் வகுப்பும், பாதுகாவலரின் பெயர் மற்றும் ஒப்பத்துடன் அதிபர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நபரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6.4.5 இலவச பாடநூல்கள் தொடர்பான பதிவுகள்
பாடசாலையில் பாடநூல்களை கோருதல் மற்றும் பகிர்ந்தளித்தல் என்பனவற்றின் பொறுப்பை பிரதி அதிபர்/ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்க முடியும்.
வருடாந்த பாடநூல்களுக்கான தேவையை பிழையின்றி கணக்கிட்டு பாடசாலையில் பாடநூல்களின் தேவைக்கான பதிவொன்றை பேணுதல் வேண்டும்.
பாடசாலைக்கு பாடநூல்கள் கிடைக்கப் பெற்றபின் உரிய படிவங்களுக்கு அமைவாக ஒவ்வொரு வகுப்பு ஆசிரியருக்கும் நூல்களை பகிர்ந்தளித்தல் வேண்டும்.
உரிய படிவங்களுக்கு அமைவாக வகுப்பு மட்டத்தில் நூல்களைப் பகிர்ந்தளிக்கும் பதிவு ஒன்றை பேணுதல் வேண்டும்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் நூல்களை வழங்கும் போது வினியோகிக்கப்படும் அனைத்து ஆவணங்களையும் வெவ்வேறாக கோவைகளில் பாடசாலையில் பாதுகாப்பாக பேணுதல் வேண்டும்.
பாடநூல்களை முறையாகவும் பாதுகாப்பாகவும் களஞ்சியப் படுத்துதல் வேண்டும்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2014/01 மற்றும் 2014/(01) (i) இலக்கங்களையுடைய சுற்று நிருபங்களையும் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும் பாடநூல்களை அகற்றுதலை மேற் கொள்ளுதல் வேண்டும்.
6.5 புகையிரத ஆணைச்சீட்டு
விடுமுறை புகையிரத ஆணைச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய படிவத்தை பூரணப்படுத்தி விண்ணப்பித்தல் வேண்டும்.
பாடசாலை நடைபெறும் தினத்தில் பிரயாணம் செய்வதானால் அனுமதிக்கப்பட்ட லீவு விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை அனுமதித்தல் நிறைவு பெற்ற பின்னர் புகையிரத ஆணைச் சீட்டுப் பதிவில் பதிந்த பின் ஆணைச் சீட்டை வினியோகித்தல் வேண்டும்.
வாழ்க்கைத் துணைக்கும் புகையிரத ஆணைச் சீட்டு உரித்து இருக்குமாயின் (இருவரும் அரச உத்தியோகத்தராக இருக்கும் பட்சத்தில்) புகையிரத ஆணைச் சீட்டு ஒருவருக்கு மாத்திரமே வினியோகிக்கப்பட வேண்டும்.
வாழ்க்கைத் துணையின் சேவை நிலையத்தில் புகையிரத ஆணைச் சீட்டுப் பெற்றுக் கொள்ளவில்லையென அதன் நிறுவனத் தலைவரால் உறுதிப்படுத்தி அக் கடிதத்தை புகையிரத ஆணைச் சீட்டுப் பதிவில் கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அக் கடிதத்தை வருடாந்தம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
சட்டபூர்வமாக தங்கி வாழ்பவர் என உறுதிப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் வயதினைக் கருத்தில் கொள்ளாது உத்தியோகத்தரில் தங்கி வாழும் பிள்ளைகளுக்காக புகையிரத ஆணைச் சீட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
திருமணமாகாதவர்களின் தங்கி வாழ்பவர்களுக்காக புகையிரத ஆணைச் சீட்டு உரித்தாகும். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் போது தமது தங்கி வாழ்வோர் தொடர்பாக கிராம உத்தியோகத்தரால் வழங்கப்படும் சான்றிதழை பிரதேச செயலாளரின் கையொப்பத்துடன் வருடாந்தம் சமர்ப்பிக்க வேண்டும்.
புகையிரத ஆணைச் சீட்டு பதிவினை இலக்கமிட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
புகையிரத ஆணைச் சீட்டு வழங்குதல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் தாபனக் கோவை விதிகளுக்கு அமைவாக மேற் கொள்ளுதல் வேண்டும்.
6.6 தினசரி தபால்
பாடசாலைகளுக்கு தபால் மூலம், கையில், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் கடிதங்கள் இவற்றில் அடங்கும்.
பாடசாலைகளுக்கு கிடைக்கும் கடிதங்களை அதிபர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதி அதிபர் முன்னிலையில் திறக்கப்பட்ட பின் தின முத்திரையை இட்டு சுருக்க கையொப்பத்தை இடுதல் வேண்டும்.
கடிதத்தை யாருக்கு கையளிக்க வேண்டும் என்பதை அதிபர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதி அதிபரால் குறிப்பினை இடுதல் வேண்டும்.
தின முத்திரை இடப்பட்டக் கடிதங்களை பதிவில் குறிக்கப்பட வேண்டியதோடு அதற்கான மாதிரி படிவம் கீழ்க் காணப்படுகின்றது.
தொடர் இலக்கம்
கிடைத்த திகதி
பதிவு இலக்கம்
அனுப்பியவரின் பெயர்
விடயம்
பொறுப்பேற்றவரின் பெயர்
சுருக்க ஒப்பம்
எடுக்கப்பட்ட நடவடிக்கை
பாடசாலைகளுக்கு கிடைக்கும் கடிதங்களுக்காக தாமதமின்றி பதிலளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிபர் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.
அன்றாட தபால் தொடர்பான மேற்பார்வை அதிபரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனுப்பப்படும் கடிதங்கள் தொடர்பாக பேணப்பட வேண்டிய பதிவொன்று தொடர்பான மாதிரி படிவம் கீழ்க் காணப்படுகின்றது.
தொடர் இலக்கம்
அனுப்பப்படும் திகதி
பதிவு இலக்கம்
பெறுபவரின் பெயரும் விலாசமும்
விடயம்
கடிதம் அனுப்பப்பட்டதற்காக உரிய நபரின் கையொப்பம்
இதற்கு மேலதிகமாக தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களுக்காக வேறான அறிக்கை வைத்துக் கொள்ள வேண்டும்.
6.7 பணிக்குழுவினருக்கான தேவையை கணக்கிடுதல்.
பாடசாலையில் இருக்க வேண்டிய பணிக்குழுவினர் எண்ணிக்கையை கணக்கிடுதலை கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
பணிக்குழுவினருக்கான தேவை, பற்றாக்குறை மற்றும் மேலதிகம் என்பனவற்றைக் கணக்கிட்டு உரிய காலத்தினுள் உரிய நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
6.8 தேசிய பரீட்சைகளுக்காக மாணவர்களை அனுப்புதல்
தயாரித்துக் கொண்ட படிவத்தின் மூலம் பரீட்சைக்குரிய தகவல்களை சேகரித்தல்.
தேசிய அடையாள அட்டைகளை உரிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
விண்ணப்பப் படிவத்தை பிழையின்றி தயாரித்தலும் உரிய தினத்திற்கு முன்னர் உரிய நிறுவனத்திற்கு அனுப்புதலும்.
அனுமதி அட்டையை உரிய காலத்தினுள் பெற்றுக்கொள்ளுதல், தாமதமின்றி மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் பெற்றுக்கொண்டதற்காக மாணவர்களின் கையொப்பப் பதிவொன்றைப் பேணுதல்.
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டுச் செயன்முறை தகவல்களை உரிய வகையில் வழங்குதல்.
பாடசாலையிலுள்ள அனைத்து ஆவணங்களையும் வகைப்படுத்தலுக்கு உட்படுத்தி பொருத்தமான நிறங்களில் கோவைப் படுத்துதலும் பொருந்தக் கூடிய குறியீட்டினூடாக அவற்றை இலக்கமிடுதலினூடாகவும் பணிகளை தரப்படுத்திக் கொள்ள முடியும்.
உதாரணம்:
நிருவாக ஆவணங்கள் - சிவப்பு நிறத்தில்
நிதி தொடர்பான ஆவணங்கள் - நீலம்
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஆவணங்கள் - பச்சை
விளையாட்டு மற்றும் இணைக் கலைத்திட்ட ஆவணங்கள் - மஞ்சள்
என்றவாறு வெவ்வேறான நிறங்களில் கோவைகளை தயாரித்துக் கொள்ள முடியும். அவ்வாறே அவற்றிற்கு பொருந்தமான குறியீடுகளை இட முடியும்.
பாடசாலையிலுள்ள அனைத்து ஆவணங்கள் தொடர்பாகவும் பெயர்ப்பட்டியலொன்று பேணப்படுதல் வேண்டும். உதா: கோவைகளுக்கு குறியீடிடுதல்.
WP / HO / JJ / Ad / st'En / 01
WP: மாகாணம் (Western Province)
HO: வலயம்
JJ: பாடசாலை
Ad: நிருவாக கோவை (Administration)
st'En: விடயக் கோவை (Student Enrolment)
01: கோவை இலக்கம்
SP / HT / RMV / Fi / Vou-Jan-01
SP: மாகாணம்
HT: வலயம்
RMV: பாடசாலை
Fi: நிதி (Finance)
Vou-Jan-01: விடயங்கள் (வவுச்சர்- ஜனவரி மாத கோவை 01)
0 Comments