>

ad

4. பாடசாலை திட்டமிடல் செயன்முறை

 Principal  Hand book  Chapter 4

உள்ளடக்கம்

4. பாடசாலை திட்டமிடல் செயன்முறை
  • 4.1. அறிமுகம்
  • 4.2. பாடசாலை மதிப்பீட்டுச் செயன்முறைகளின் படிமுறைகள்.
    • 4.2.1. செயல்நிலை ஆய்வு மற்றும் பாடசாலை தொடர்பான சுய மதிப்பீடு.
    • 4.2.2. குறிக்கோள்கள், இலக்குகள் மற்றும் நோக்கங்களை இனங் காணுதல்.
      • 4.2.2.1. பாடசாலையின் தூர நோக்கு
      • 4.2.2.2. பாடசாலையின் பணிக்கூற்று.
      • 4.2.2.3. பாடசாலையின் நோக்கங்கள்
    • 4.2.3. இடைக்கால மற்றும் வருடாந்த திட்டங்களைத் தயாரித்தல்
      • 4.2.3.1. இடைக் காலத் திட்டம்.
      • 4.2.3.2. வருடாந்த செயற்பாட்டுத் திட்டம்.
      • 4.2.3.3. பாடசாலை நாட்காட்டி
    • 4.2.4. பாடசாலைத் திட்டத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • 4.3. பாடசாலை வியூகச் செயற்பாடுகள்

4.1 அறிமுகம்

பாடசாலையின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக உரிய கால எல்லைக்குள் நடைமுறையிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை விளைதிறன்மிக்க வகையில் முதலீடு செய்வதற்கான மூலோபாயங்களை தீர்மானித்து பாடசாலையின் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

அதன்போது தேசிய கல்விக் கொள்கைகள், கல்விக் குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சிகள், சர்வதேச இணக்கப்பாடுகள் மற்றும் போக்குகள், காலத்திற்கேற்ற தேசிய கொள்கைகள் மற்றும் பொதுக் கல்விக்கென தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கல்வி துறைசார் அபிவிருத்திச் சட்டகம் என்பனவற்றை அடிப்படையாகக் கொள்ளுதல் வேண்டும்.

அதைப் போன்றே, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலைத் திட்டமிடல் செயன்முறை தொடர்பான வழிகாட்டலை பின்பற்ற வேண்டும்.

4.2 பாடசாலைத் திட்டமிடல் செயன்முறையின் படிமுறைகள்



  • செயல்நிலை ஆய்வும் சுய மதிப்பீடும்
  • குறிக்கோள்கள்/ இலக்குகள் மற்றும் நோக்கங்களை இனங் காணுதல்
  • இடைக்கால மற்றும் வருடாந்த திட்டங்களைத் தயாரித்து அங்கீகரித்துக் கொள்ளுதல்
  • நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல், பின்னூட்டல் மற்றும் பெறுபேற்றை மதிப்பிடுதல்

4.2.1 செயல்நிலை ஆய்வும் பாடசாலைப் பற்றிய சுய மதிப்பீடும்

பாடசாலை திட்டமிடல் செயன்முறையின்போது முதலாவது படிமுறையாக அமைய வேண்டியது செயல்நிலை ஆய்வாகும். இதன்போது பாடசாலையின் தற்போதைய நிலை, பிரச்சினைகள் மற்றும் சமூகத்தின் குறிக்கோள்கள் தொடர்பாக ஆய்வுரீதியாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளின் கீழ் பகுப்பாய்வு செய்வதினூடாக தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தெளிவினை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

  • கல்வி நுழைவுக்கான வாய்ப்புகள் தொடர்பான சுட்டிகள்: (உதாரணம் - ஆரம்பக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர் எண்ணிக்கை, ஒவ்வொரு வகுப்பிலும் இடைவிலகும் மாணவர்களின் வீதம்).
  • கல்விப் பண்புத் தரச் சுட்டி: (உதாரணம் - தேசிய மட்ட பரீட்சைகளில் சித்தி பெற்றோர் வீதம், உள்ளக மற்றும் வெளிவாரி மதிப்பீடுகளுக்கு இணங்க கல்விப் பண்புத் தரச் சுட்டி...).
  • நல்லாட்சி மற்றும் சேவை வழங்குதல் தொடர்பான சுட்டிகள்: (உதாரணம் - மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள், ஒரு மாணவனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பறை இட அளவு...).

இதற்கு மேலதிகமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்:

  • பாடசாலையின் வரலாற்றுப் பின்னணி, தற்போதைய மாணவர் எண்ணிக்கை, அடைவு மட்டம் தொடர்பான தகவல்கள், பௌதீக மற்றும் மனித வளம் தொடர்பான தகவல்கள், உள்ளக மற்றும் வெளிவாரி மதிப்பீட்டு வெளிப்பாடுகள் என்பனவற்றின் தகவல்கள்.
  • பாடசாலை சமூகத்தின் கருத்துகள், முன்மொழிவுகள் மற்றும் பாடசாலை முகாமைத்துவத் தகவல் முறைமையின் தரவுகளின் பகுப்பாய்வு.
  • பாடசாலையின் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்களை பிழையின்றி இனங் காணுதல் திட்டம் தயாரிக்கும் போது மிகவும் முக்கியமாவதோடு செயல்நிலை ஆய்வுக்காக பல்வேறு முறையியல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். (உதா: SWOT பகுப்பாய்வு, FISH BONE பகுப்பாய்வு).
  • இனங்கண்டுகொண்ட பிரச்சினைகள் மற்றும் தேவைகளை முன்னுரிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதோடு அம் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்வுகளையும் உபாயங்களையும் இனங் கண்டு அதற்கிணங்க வேலைத்திட்டங்களையும் செயற்றிட்டங்களையும் தயாரித்து திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.

4.2.2 குறிக்கோள்கள், இலக்குகள் மற்றும் நோக்கங்களை இனங்காணுதல்

பாடசாலையை தற்போதுள்ள மட்டத்திலிருந்து எதிர்காலத்தில் அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் மட்டத்தைத் தீர்மானிக்க வேண்டும். அவ் எதிர்பார்க்கும் மட்டத்திற்கு அண்மித்தலுக்காக பாடசாலையின் தூர நோக்கு, பணிக்கூற்று மற்றும் நோக்கங்களுக்கு அமைவாக திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

4.2.2.1 பாடசாலையின் தூரநோக்கு

"தூரநோக்கு'' எனப்படுவது பாடசாலை எதிர்காலத்தில் அடைந்து கொள்ள வேண்டிய குறிக்கோள்களையும் அண்மிக்க வேண்டிய பண்புத் தர நிலை தொடர்பான பொது நிலையையும் பிரதிபலிக்கும் அர்த்தபூர்வ வெளிப்படுத்தலாகும்.

தூர நோக்கைத் தயாரிக்கும்போது கீழ்க் காணப்படும் விடயங்கள் தொடர்பாக விசேடமாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும்:

  • அனைத்துத் தரப்பினருக்கும் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருத்தல்.
  • தெளிவாக, சுருக்கமாக மற்றும் சரளமாக இருத்தல்.
  • அடைந்து கொள்ளக்கூடிய இலக்கினைக் கொண்டதாக இருத்தல்.
  • பாடசாலையின் எதிர்கால குறிக்கோள்களுடன் பொருந்துதல்.
  • அர்த்தபூர்வமுள்ளதாக இருத்தல்.
  • பாடசாலையின் பேண்தகு அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருத்தல்.
  • தூர நோக்கினை அடைந்து கொள்வதன் மூலம் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் குணாம்சங்களும் பொதுநிலையையும் பிரதிபலித்தல்.
  • தூர நோக்கைத் தயாரிக்கும் போது பாடசாலை சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல்.

4.2.2.2 பாடசாலையின் பணிக்கூற்று

பாடசாலையின் தூர நோக்கை அடைந்து கொள்வதற்கென பாடசாலையின் பங்குத்தாரர்களினால் நிறைவேற்ற வேண்டிய ஒட்டு மொத்த பணிகள் பணிக் கூற்றினுள் கட்புலனாக வேண்டும். அதில் பல்வேறு உபாயங்கள், ஏற்றத்தாழ்வுகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் எதிர்கால நிறைவு தொடர்பாக குறிப்பிடப்பட வேண்டும்.

பணிக் கூற்றைத் தயாரிக்கும் போது கீழ்காணப்படும் விடயங்களின்பால் கவனஞ் செலுத்த வேண்டியுள்ளதோடு இதனூடாக பாடசாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளின் சுருக்கமான கருமூலம் விபரித்துக் காட்டப்படுதல் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • தூர நோக்கு வரைவிலக்கணம் செய்யப்படும் வகையில் பணிக்கூற்று தயாரிக்கப்படுதல்.
  • தெளிவாயிருத்தல், சரளமாக இருத்தல் மற்றும் பாடசாலையின் கலாசாரத்தை பிரதிபலித்தல்.
  • பாடசாலை தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் போது அடிப்படையாகக் கொள்ளக் கூடியதாக இருத்தல்.

உதாரணம் - 01

தூரநோக்கு: "நற்பண்புகளை மாதிரியாகக் கொண்ட சமூகத்தின் தலைமைத்துவ சிறப்பியல்புகளுடன் கூடிய சிறார்கள்"

பணிக்கூற்று: "இலங்கை நாட்டின் கலாசாரம் மற்றும் தேசிய தனித்துவம் என்பனவற்றை பாதுகாக்கக் கூடிய தேர்ச்சிகளைக் கொண்ட சமநிலை ஆளுமைகளுடன் கூடிய சிறார்களை உருவாக்குதல்"

உதாரணம் - 02

தூரநோக்கு: "எல்லா வகையிலும் சமநிலை ஆளுமையுடன் கூடிய எதிர்கால வேலையுலகிற்கு பொருந்தும் குழுவினரை சமூகத்திற்கென உருவாக்குதல்."

பணிக்கூற்று: "தேசிய கல்விக் குறிக்கோள்களுக்கு இணங்க பூரண கலைத்திட்டத்தை அமுல்படுத்தி பிள்ளைகளின் மறைந்துள்ள ஆற்றல்களை உயர்வான மட்டத்திற்கு அபிவிருத்தி செய்யக் கூடிய, கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கும் மற்றும் விழுமியங்களைப் பாதுகாக்கும் குழுவினரை உருவாக்குவதற்காக வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்க நிறுவனமாக பாடசாலையை அபிவிருத்தி செய்தல்"

4.2.2.3 பாடசாலையொன்றின் குறிக்கோள்கள்

கீழ்க் காணப்படும் விடயங்களைக் கருத்தில் கொண்டு பாடசாலையின் குறுங்கால மற்றும் நீண்ட கால குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  • நிகழ்கால தேசிய கல்விக் குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சிகள்.
  • பாடசாலையின் தூரநோக்கும் பணிக்கூற்றும்.

குறிக்கோள் ஒன்றை உருவாக்கும்போது கீழ்க் காணப்படும் விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும் (SMART):

  • S - Specific (திட்டவட்டமானது)
  • M - Measurable (அளவிடக்கூடியது)
  • A - Attainable (அடைந்துகொள்ளக்கூடியது)
  • R - Realistic (நடைமுறைக்கு சாத்தியமானது)
  • T - Timely / Time bound (கால வரையறைக்கு உட்பட்டது)

4.2.3 இடைக்கால மற்றும் ஓராண்டு திட்டங்களைத் தயாரித்தல்

பாடசாலையொன்றின் திட்டமானது கல்வியில் அளவு ரீதியான, பண்பு ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். திட்டம் தயாரித்தலானது பங்கேற்றல் செயற்பாடாக அமைய வேண்டும். பாடசாலை சமூகத்தின் கருத்துகளைப் பெற்றுக் கொள்ளுதலும் அக் கருத்துகளை பகுப்பாய்வு மற்றும் முன்னுரிமைப்படுத்தலின் மூலம் பொருத்தமான வேலைத்திட்டங்களை தயாரித்து உள்ளடக்குதல் முக்கியமாகும்.

திட்டம் தயாரிக்கும் போது கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும்:

  • கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்
  • கலைத்திட்ட முகாமைத்துவம்
  • பௌதீக மற்றும் நிதிவள முகாமைத்துவம்
  • பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில் ரீதியான ஆசிரியர் அபிவிருத்தி
  • சமூகத் தொடர்பு
  • மாணவர் பண்புத் தர விருத்தி.

4.2.3.1 இடைக் காலத்திட்டம்

கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்படும் வழிகாட்டல்களுக்கு இணங்க அனைத்து பாடசாலைகளும் இடைக் காலத் திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும். நடப்பு வருடத்திலிருந்து அடுத்த ஐந்து வருடங்களில் உத்தேச நோக்கங்களை அடைந்து கொள்வதற்தாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பிரதான செயற்பாடுகளை அதில் உட்படுத்த வேண்டும்.

இடைக்காலத் திட்டத்தைத் தயாரிப்பதால் பாடசாலையில் நடைமுறையிலுள்ள தற்போதைய போக்குகளுக்கு வருடாந்தம் ஏற்படும் அழுத்தங்கள் தெளிவுப்படுத்தப்படுவதோடு அதற்கிணங்க முன்னோக்கிய திட்டத்தைத் தயாரிப்பதற்கு அது வழி வகுக்கும். இத் திட்டமானது வருடா வருடம் தற்காலப்படுத்தப்படும் புரழ்வுத் திட்ட (Rolling Plan) முறையை கொண்டதாகும்.

இடைக்காலத் திட்டமொன்றில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்:

  • பெறுபேறுகள்
  • வெளியீட்டு நோக்கங்கள்
  • வெளியீடுகள்
  • செயலாற்றுகைச் சுட்டி
  • செலவு மதிப்பு
  • மூலோபாயங்கள்/வேலைத்திட்டங்கள்/செயற்பாடுகள்
  • முன்னேற்றத்தை அறிக்கைப்படுத்தும் முறை
  • வெளியக காரணிகள்
  • பௌதீக இலக்குகள்.

4.2.3.2 வருடாந்த செயற்பாட்டுத் திட்டம்

இடைக் காலத் திட்டத்திற்கிணங்க உரிய வருடத்தினுள் நடைமுறைப்படுத்தவதற்கு எதிர்பார்க்கும் செயற்பாடுகளை இனங்கண்டு வருடாந்த திட்டம் அதாவது இடைக் காலத்திட்டத்திற்கமைவாக உரிய வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமான ஆவணமொன்றை தயாரித்தல் வேண்டும். அவ் வருடத்திற்குரிய வரவு செலவு மதிப்பீட்டை இதனுடன் இணைந்ததாக தயாரிக்க வேண்டும். விசேட சந்தர்ப்பங்களில் முன் அனுமதியுடன் வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் மற்றும் நிதி மதிப்பீடு என்பனவற்றை திருத்தம் செய்து கொள்ள முடியும்.


வருடாந்த திட்டமொன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள்:

  • உபாயங்கள்
  • செயற்பாடுகள்
  • கால வீச்சு
  • வரவு செலவு
  • நிதி மதிப்பீடு
  • நிதி மூலம்
  • செயலடைவுச் சுட்டி
  • பொறுப்பு

திட்டம் தயாரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக அளவீடு செய்தலுக்கான சுட்டிகளைத் தயாரிக்க வேண்டும்.

4.2.3.3 பாடசாலை நாட்காட்டி

பாடசாலை நாட்காட்டி எனப்படுவது கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், வலயக் கல்விப் பணிமனையினால் அறிவிக்கப்படும் பல்வேறு தினங்கள்/ வேலைத்திட்டங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தி அதனுடன் பாடசாலை வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்திற்கு இணைந்ததாக அவ் வருடத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தினங்களை திட்டவட்டமாக உள்ளடக்கி தயாரிக்கப்படும் ஆவணமாகும்.

4.2.4 பாடசாலைத் திட்டதிற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்

பாடசாலை திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர், உரிய தரப்பினருக்குத் தெளிவுப்படுத்தி காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் பாடசாலைத் திட்டம் மற்றும் நிதி சுற்றுநிருபங்களில் காட்டப்பட்டுள்ளவாறு உரிய அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கிணங்க ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத இறுதிக்கு முன் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு ஆவணங்களை உள்ளடக்கிய வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 15 ஆந் திகதிக்கு முன்னர் விசேட பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டத்தை கூட்டி ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு நவம்பர் 30 ஆந் திகதிக்கு முன்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளர்/வலயக் கல்விப் பணிப்பாளர்/ கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுத்துதல் வேண்டும்.

4.2.5 திட்டத்தை நடைமுறைப்படுத்துதலும் கண்காணித்தலும்

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களால் திட்டங்களில் இனங்காணப்பட்ட மூலோபாயங்கள் மற்றும் செயற்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதைப் போன்றே அது தொடர்பான முன்னேற்றத்தை கண்காணித்தலை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இக் கண்காணிப்பானது தொடர்ச்சியான செயற்பாடாக இருக்க வேண்டியதோடு கண்காணிப்பின் தகவல்களின் அடிப்படையில் திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பாக பரிகார முறையியலை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலை திட்டமிடல் செயன்முறை தொடர்பான வழிகாட்டி கோவை (2013), பொதுக் கல்வி தொடர்பான இடைக் காலத் திட்டம் 2018-2025 மற்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 26/2018 பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்பு ரீதியான அளவு ரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டி கைந்நூலை பரிசீலனை செய்க.

4.3 பாடசாலை வியூக நடவடிக்கைகள்

பாடசாலையொன்றில் கீழ்க் காணப்படும் செயற்பாடுகளாவன வியூக நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றது.

  • புதிதாக பாடசாலையொன்றை ஆரம்பித்தல்.
  • புதிதாக வகுப்பு ஒன்றை அல்லது கற்றல் சுற்றுக்கள் ஒன்றை ஆரம்பித்தல்.
  • பாடசாலையை மீள் கட்டமைப்புச் செய்தல் (பாடசாலைகளை ஒன்றினைத்தல், அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை பிரித்தல், ஆரம்பப் பிரிவு வகுப்புகளை ஆரம்பித்தல், வகுப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், புதிதாக வகுப்புகளை ஆரம்பித்தல், புதிதாக பாடத் துறைகளை ஆரம்பித்தல்).
  • பாடசாலையொன்றை மூடிவிடுதல்.
  • பாடசாலைகளைத் தரமுயர்த்துதல்.
  • பாடசாலைகளை தற்போதுள்ள இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்துதல்.
  • பாடசாலையொன்றின் பெயர் மாற்றம் செய்தல்.
  • பாடசாலைக்கென காணியை சுவீகரித்தல்.

பாடசாலையொன்றில் மேல் குறிப்பிடப்பட்ட பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் முன்மொழிவுகளை ஒப்புதல் செய்து கொண்ட பின் உரிய அறிக்கையையும் கையொப்பப் படிவம் உட்பட தேவைப்பாடு தொடர்பாக அதிபரால், தேவையான சந்தர்ப்பங்களில் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும்.

அம் முன்மொழிவை முதலில் வலய வியூகக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டதன் பின் மாகாண வியூக குழுவிற்கு சமர்ப்பித்து சிபாரிசைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

மாகாணப் பாடசாலையெனில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினாலும், தேசிய பாடசாலையெனில் கல்வி அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளரால் நிலையியல் கட்டளையொன்றை வழங்கி உரிய மாற்றம் முன்னெடுக்கப்படும்.

4.3.1 பாடசாலையில் வியூக அடிப்படையிலான மாற்றங்களை ஏற்படுத்தும் போது தயாரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • உரிய படிவம்.
  • பாடசாலை அபிவிருத்திச் சங்க முன்மொழிவின் பிரதியொன்றும் வருடாந்த பொதுக் கூட்டத்தின் அறிக்கையும்.
  • பாடசாலை அபிவிருத்திச் சங்க கையொப்பப் படிவம்.
  • புதிய பாடத்துறையொன்றை ஆரம்பிப்பதாயின் அப் பாடத்துறைக்கென அனுமதி பெற எதிர்பார்க்கும் மாணவர் எண்ணிக்கை (பெயர் மற்றும் பெறுபேற்று அட்டவணையுடன்).
  • புதிய பாடத்துறையொன்றை ஆரம்பிப்பதாயின் கடந்த வருடங்களின் பெறுபேற்று பகுப்பாய்வு.
  • பௌதீக வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் விதம் தொடர்பான அறிக்கை.
  • மனிதவள வழங்கல் தொடர்பான அறிக்கை.
  • பக்கத்திலுள்ள பாடசாலைகளில் நடாத்தப்படும் வகுப்புகள் / பாடத்துறைகள் மற்றும் அப் பாடசாலைகளுக்கான தூரம் என்பனவற்றை உள்ளடக்கி பாடசாலையின் பாடத்துறைகள்/வகுப்புகளை ஆரம்பித்தலை நியாயப்படுத்துவதற்கான விபரங்கள் (உரிய படிவங்களுக்கு அமைவாக).
  • பாடசாலையினதும் பக்கத்திலுள்ள பாடசாலைகளினதும் அண்ணளவான வரைபடம்.
  • தேவையான சந்தர்ப்பங்களில் சமூக உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்ட கடிதம்.

Post a Comment

0 Comments