>

ad

பாடசாலையில் ஒழுக்கம் பேணுவது தொடர்பான கல்வி அமைச்சின சுற்றுநிருபம். 12/2016

ශ්‍රී ලංකාවේ අධ්‍යාපන ඉතිහාසය

கல்வி அமைச்சு
'இசுருபாய', ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை,
பத்தரமுல்ல.

திகதி: 2016.04.29
சுற்றறிக்கை இலக்கம்: 12/2016

சகல மாகாணங்களினதும் கல்விச் செயலாளர்கள்,
சகல மாகாணங்களினதும் கல்விப் பணிப்பாளர்கள்,
சகல வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்கள்,
சகல கோட்டக்கல்வி காரியாலயங்களுக்கும் பொறுப்பான பிரதி / உதவி கல்விப் பணிப்பாளர்கள்,
சகல் அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கிகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளினதும் அதிபர்கள்.

பாடசாலையினுள் ஒழுக்கம் பேணுதல்

தமது சமூகத்துக்கு உரித்தான் கலாச்சார சிறப்பம்சங்களை எதிர்கால சந்ததியினருக்கு உரிமைச் சொத்தாக வழங்கி, சிறந்த ஒரு சூழலை பேணும் முகமாக தற்கால மாணவ சந்ததியை எதிர்கால உலகத்துக்கு ஏற்ற விதத்தில் தயார் செய்வதே ஒரு சமூகத் தாபனம் என்ற வகையில் பாடசாலைகளுக்கு பொறுப்பளிக்கப்படும் முக்கிய பணியாகும். இதன்போது மாணவர்கள் சமூகத்தினுள் ஒழுக்கத்தை பேணும் விதத்தில் சமூகத்தில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து வாழுவதற்கு உகந்த விதத்திலான கருத்துக்கள் மற்றும் நற்பண்புகளில் பயின்றவர்களாக உருவாவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

தற்போதைய சிக்கலான சமூக அமைப்பினுள் பல்வேறுபட்ட அழுத்தங்கள் காரணமாக பாடசாலை மாணவர்களிடமிருந்து வெளிப்படும் உசிதமற்ற நடத்தைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளினால் அவர்கள் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக அறிக்கையிடப்பட்டுள்ளமையால், இந்த நிலைமைகளை குறைப்பதற்காக பாடசாலைகளினுள் ஒழுக்கத்தை பேணும் முகமாக வெளியிடப்பட்டுள்ள 2005.05.11 ஆந் திகதிய 17/2005 ஆம் இலக்க சுற்றறிக்கையை மேவியதாக 2016.05.02 ஆந் திகதி முதல் இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

ஆகவே, பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களுக்கு பாதுகாப்பு நல்கும் முகமாகவும், அவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை தடுப்பதற்காகவும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாட்குழு உறுப்பினர்கள் இங்கு குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றேன்.

1.0 பாடசாலை ஒழுக்கம்

1.1 பாடசாலையினுள் ஒழுக்கம் பேணுதல் என்பதால் கருதப்படுவது யாதெனில், குறித்த பாடசாலை மற்றும் பாடசாலை கலாசாரத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் மூத்தோரின் (கல்வி மற்றும் கல்விசார பணியாட்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்) நடத்தைகளை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பாடசாலையின் சட்டக் கோவைக்கு இணங்கியொழுகுவதாகும்.

1.2 இதற்கமைய, பாடசாலைகளில் ஒழுக்கம் பேணுகையில் இதில் தாக்கம் செலுத்தக் கூடிய விடயங்கள் குறித்து பல்வேறுபட்ட தரப்பினர் கீழே குறிப்பிடப்படும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்:

  • (அ) பிள்ளைகளுடன் சிறந்த உறவுகளைக் கட்டியெழுப்புவதன் ஊடாக மாணவர்கள் மத்தியில் தமது பொறுப்புக்கள் பற்றிய உணர்வுகளை கிரமமாக வளர்ப்பதன் மூலம் மாணவர்களில் சுய ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்கான இயலுமை ஆசிரியர்களுக்கு காணப்படுகின்றது.
  • (ஆ) ஆசிரியர்களுக்குப் போன்றே மாணவர்களுக்கும் தமக்கே உரித்தான தனிப்பட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த சிக்கல்களை தனித்தனியே அடையாளம் காண்பதற்கும், அவ்வாறு அடையாளம் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான செயன்முறைகளை தயார் செய்து கொள்ள உதவும் அறிவு மற்றும் ஆற்றலை ஆசிரியர்களில் வளர்ப்பதன் மூலமும் மாணவர்களின் ஒழுக்கத்தை பேணுவதற்கான இயலுமை காணப்படுகின்றது.
  • (இ) பாடசாலைகளில் மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் சூழலை கட்டியெழுப்புதல் மற்றும் இதனுடன் இணைந்ததாக பாடசாலைக்கென அடையாளம் காணப்பட்ட கல்வி நோக்குடன் மாணவர்களின் ஆற்றல்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் சுயஒழுக்கக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டுவதனாலும் ஒழுக்கம் பேணுவதற்கான இயலுமை அதிகரிக்கின்றது.

1.3 சமகாலத்தில் பாடசாலைக்குள் ஒழுக்கத்தைப் பேணுவதற்காக பாடசாலையால் பலவிதமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கல்வி அமைச்சினால் உடல்ரீதியான தண்டனை வழங்கப்படுவது தடைசெய்யப்பட்டிருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் குற்றத்தின் இயல்புக்கு அமைய உடல்ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

2.0 உடல்ரீதியான தண்டனை வழங்கல்

2.1 மாணவர்களது பாதுகாப்பை ஒழுங்கமைக்கும் போது பெற்றோருக்கு உள்ள பொறுப்புக்கு சமனான பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உள்ளது என்ற எண்ணக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட "in Loco Parentis" ஐ அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளில் எதிர்பார்க்கப்படும் நடத்தைகளுக்கு பொருத்தமற்ற நடத்தைகளை வெளிப்படுத்தும் மாணவர்களது இந்த ஒவ்வாத நடத்தைகளை தடுப்பதற்காக உடலுக்கு வேதனை தரும் வகையில் வழங்கும் தண்டனை உடல்ரீதியான தண்டனை எனப்படும்.

வைத்தியர்கள், உளமருத்துவ நிபுணர்கள், மனிதசெயற்பாட்டாளர்கள் ஆகிய குழுக்கள் உடல்ரீதியான தண்டனை வழங்கலை பிள்ளைகளுக்கு உடல்ரீதியாக துன்புறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்படும் ஒரு தண்டனையென தெளிவுபடுத்துகின்றனர். மேலும், அவர்கள் இது குறிப்பிட்ட மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளை பாதிப்பதுடன் எதிர்காலத்தில் அவர்கள் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அவகாசத்தை அதிகரிப்பதாகவும், பிற்பட்ட காலங்களில் அவர்கள் கடுமையான மனநிலை பாதிப்புக்கு ஆளாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் இத்தகைய தாக்குதல்கள் மூலம் கிடைக்கப்பெறுகின்ற சாதகமான விளைவுகளையும் விட பாதகமான விளைவுகளே அதிகமாக உள்ளதாக புலப்பட்டதன் பின்னர், பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளை போல இலங்கையிலும் தற்போது உடல்ரீதியான தண்டனை வழங்கலை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும், இத்தகைய தண்டனை வழங்கல்கள் மூலம் வகுப்பறைகளில் மாணவர்களது நடத்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டமைக்கான சாட்சிகள் மிகவும் குறைவாகக் காணப்படுவதனால் இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது பயனற்ற ஒரு செயன்முறையென புலப்பட்டுள்ளது.

ஆகவே, மாணவர்களில் நடத்தைரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நற்குணத்துடனேனும் ஒரு மாணவருக்கு/ மாணவிக்கு உடல்ரீதியான துன்புறுத்தல்களை ஏற்படுத்தும் விதத்தில் தண்டனை வழங்குவதை தவிர்த்துக் கொள்வதற்கு அனைவரும் கவனமாக இருத்தல் வேண்டும்.

2.2 இலங்கையினால் கைச்சாத்திடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ள 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான சமவாயத்தின் 28(2) பிரிவின் மூலம் பாடசாலைகளில் ஒழுக்க நிருவாகத்தை மேற்கொள்கையில் பிள்ளைகளின் மானிட கௌரவத்துக்கு இணங்க இதை மேற்கொள்ள வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

2.2.1 நடத்தைகளை நெறிப்படுத்தும் முகமாக பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் வழியாக எதிர்பார்க்கப்படும் விளைவுகள் எட்டப்பெறவில்லை எனவும், வேறு பாதகமான விளைவுகள் இதன் மூலம் உருவாகுவதாகவும், உடல்ரீதியான தண்டனை வழங்கல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாகக் கூடிய பாதகமான விளைவுகளாக:

  • i. உடல்ரீதியான தண்டனை வழங்கல் மூலம் வன்முறை, தாக்குதல், களவு போன்ற சமூக எதிர்ப்பு நடத்தைகள் மாணவர்களில் ஏற்படுதல்.
  • ii. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான அபாயம் அதிகரித்தல்.
  • iii. மாணவர்களில் ஆக்கிரமிப்பு, குழப்படியான நடத்தைப் பண்புகள் உருவாகுதல்.
  • iv. மாணவர், ஆசிரியர், அதிபர் இடையிலான உறவுகள் படிப்படியாக விலகிச் செல்லுதல்.
  • v. எதிர்மறையான சமூக மற்றும் உள நிலைக்கு பிள்ளை தள்ளப்படுதல்.
  • vi. பிள்ளைகள் எண்ணக்கருத்துக்களை கட்டியெழுப்புகையில் பாதிப்பான அழுத்தங்கள் ஏற்படுதல்.
  • vii. எதிர்வரும் காலங்களில் இத்தகைய மாணவர்களில் தோல்வி மனப்பாங்கு உருவாவதன் காரணமாக சமூகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் உருவாவதற்கான அதிகூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
  • viii. பொதுச் சொத்துக்களை அழிக்கும் ஒரு நபராக உருவாகுதல்.
  • ix. மாணவர்களில் குறைந்த கல்வி அடைவுகள் ஏற்படுதல்.

2.2.2 பாடசாலையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளுக்கு ஒவ்வாத நடத்தைகளைப் பிரதிபலிக்கும் மாணவர்களுக்கு உகந்த சரியான நடத்தைகளை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாடசாலை ஒழுங்காற்று சபையொன்றை தாபித்தல் வேண்டும்.

2.3 ஒழுங்காற்று சபையின் கூட்டமைப்பு:
அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஒழுக்கத்துக்கு பொறுப்பான ஆசிரியர், பிரிவுத் தலைவர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்குமாறு பாடசாலையின் மாணவர் தொகைக்கு அமைவாக ஒழுங்காற்று சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

2.3.1 மாணவர்களின் பொருத்தமற்ற நடத்தைக்கான ஒழுங்காற்று சபையின் பணிகள்:
ஒழுக்காற்று சபைக்கு பாடசாலையில் மேற்கொள்ளப்படும் பல செயற்பாடுகளுக்கிடையே குறிப்பிட்ட மாணவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருத்தமற்ற நடத்தைகள் தொடர்பில் விசாரணை நடத்தி, இது தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும் சாட்சிகள் அனைத்தையும் முறையாக கோப்பிடுதல் வேண்டுமென்பதுடன், இதற்காக தனியான ஒரு ஆவணக்கோப்பை பராமரித்தல் வேண்டும். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பாடசாலையினுள் மாணவர்களின் ஒழுக்க கட்டுப்பாடு தொடர்பில் கீழே காட்டப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

2.3.2 உடல்ரீதியிலான தண்டனைகளை வழங்குவதற்குப் பதிலாக கீழே காட்டப்பட்டுள்ள பதில் நடவடிக்கைகளைப் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்:

  • i. பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஒழுக்கத்தை மீறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை குறைப்பதற்காக, பாடசாலையில் முன்னெடுக்கப்படும் பாடங்களுடன் இணைந்ததான செயற்பாடுகளை சிறப்பான விதத்தில் ஒழுங்கமைத்தல் மற்றும் மாணவர்கள் புரியும் நற்காரியங்களை விசேடமாக பாராட்டுதல்.
  • ii. பாடசாலை ஒழுக்கநெறி முறைமை தொடர்பில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நற்செயல்களை மீள்ஊட்டம் செய்ய வேண்டியதுடன், தவறான செயற்பாடுகளை அங்கிகரிக்கக் கூடாதென்பதுடன், இதனை ஊக்குவிக்கவும் கூடாது.
  • iii. சிறந்ததொரு நடத்தை முறைமையினை ஏற்படுத்துவதற்கும், பாடசாலையினுள் ஒழுக்கத்தை பேணுவதற்கும் மற்றும் ஒழுக்கமாக நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை புரியவைப்பதற்கும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குதல்.
  • iv. மாணவர்கள்/ மாணவிகள் தவறிழைத்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில் அவர்/ அவள் புரிந்துள்ள தவறை புரிய வைத்தல்.
  • v. கடுமையான, ஒழுக்கத்துக்கு மாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பங்களிலும், உடல்ரீதியான தண்டனைகளை வழங்குவதற்கு பதிலாக எச்சரித்தல் மற்றும் நிலமைக்கு ஏற்றவாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை அழைத்து இது தொடர்பில் விளங்க வைத்து அவர்களை அறிவுறுத்துதல் (உடல், உள துன்புறுத்தல்களுக்கு இலக்காகாத வகையில் மாணவர்களது உளநிலையை அபிவிருத்தி செய்யக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் முக்கியமாகும்).
  • vi. அவ்வாறு கடுமையான விதத்தில் ஒழுக்கத்தை மீறிய ஒரு செயல் மேற்கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் பாதுகாவலர்களைப் போன்றே கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தி இரு வாரத்துக்கு மேற்படாத வகுப்பு தடையை அமுல்படுத்துதல்.
  • vii. தவறிழைத்த மாணவர்/ மாணவி அநுபவித்த சிறப்புரிமைகளை மட்டுப்படுத்துதல்/ இடைநிறுத்துதல். (உ-ம்:- மாணவர் தலைவி, வகுப்பு தலைவர்/ குறித்த பதவியிலிருந்து நீக்குதல்).
  • viii. பாடசாலை ஒழுங்காற்று சபையினால் மிகவும் பாரதூரமான ஒழுக்கத்தை மீறிய ஒரு செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்படும் ஒரு பட்சத்தில், குறித்த செயலின் தன்மை மற்றும் அதன் கடுமையைப் பொறுத்து வலயக் கல்விப் பணிப்பாளரின் அல்லது மாகாண கல்வி பணிப்பாளரின் முன்கூட்டிய அனுமதியுடன் இரண்டு வார காலத்துக்கு அதிகமான ஒரு காலப்பகுதிக்கு வகுப்புத் தடையை மேற்கொள்ளுதல் அல்லது பிள்ளையை பிறிதொரு பாடசாலையில் கல்வி பயின்ற அதே தரத்துக்கு மாற்றுதல்.

மேற்கூறிய vi மற்றும் vii இன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் போது அதிபரால் பாடசாலை ஒழுக்காற்று சபையை கூட்டி அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் உரிய பரிசீலனையின் பின் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே அவ்வாறு செயற்படவேண்டும்.

மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகையில் குறித்த அறிக்கைகளை ஆவணப்படுத்துதல் அவசியம் என்பதுடன், இவற்றை பாதுகாப்பாக கல்லூரியில் வைத்திருப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். மேலே vii மற்றும் viii இல் குறிப்பிடப்படும் செயற்பாடுகளை மேற்கொள்ளுகையில் அதிபர் இது தொடர்பில் சம்பவத்திரட்டு புத்தகத்தில் குறிப்பை வைத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட விதத்தில் மாணவர்கள் மத்தியில் நன்நடத்தை நெறிகளை ஏற்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கல்லூரியின் முதன்மை கூட்டம் அல்லது விளம்பரப் பதாதைகள் மூலம் பாடசாலையினுள் பிரசித்தப்படுத்தாமல் இருப்பதற்கு கவனமாயிருத்தல் வேண்டும். இத்தகைய செயற்பாடுகளை மாணவர்/ மாணவியின் தனிப்பட்ட சுயகௌரவம் பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும்.

2.4 பாடசாலையில் ஒழுக்கத்தை பேணும் முகமாகவேனும் மாணவர்களைத் தண்டிக்கும் பட்சத்தில் கீழே காட்டப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்:

  • i. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் III ஆவது பந்தியின் 11 ஆவது பிரிவு மற்றும் XVI பந்தியின் 126 ஆவது பிரிவின் பிரகாரம் அடிப்படை உரிமை மீறல் மீதான வழக்கொன்று உருவாகலாம்.
  • ii. 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டனைச் சட்டக் கோவையின் 3வது பிரிவு மற்றும் முதன்மைச் சமவாயத்தின் 308(அ) பிரிவின் கீழ் பிள்ளைகளை சித்தரவதைக்கு உள்ளாக்கும் குற்றத்தின் மீது வழக்கொன்று உருவாகலாம். இதன் பிரகாரம் குறித்த சம்பவத்துடன் ஏற்புடையதாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை விசாரணை செய்கையில் இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென சட்டமா அதிபர் அறிக்கையிடும் பட்சத்தில் குறித்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
  • iii. கல்விக்குரிய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் ஒழுங்காற்று விசாரணைகளில் உடல்ரீதியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் தாபனக் கோவையின் II வது தொகுதியின் பிரகாரம் ஒழுங்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

3.0 சிறுவர் துஷ்பிரயோகம்

3.1 சிறுவர் பராயத்துக்கு பொருந்தாத உகந்ததல்லாத செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை சிறுவர் துஷ்பிரயோகமென அடையாளப்படுத்த முடியும். இலங்கையினுள் பல வருடங்களாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் விரைவாக அதிகரித்துள்ளதுடன், தற்போது பல்வேறு வகையிலான ஏராளமான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளாந்தம் அறிக்கையிடப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.

3.2 சிறுவர் துஷ்பிரயோகங்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்காக மாணவர்/ மாணவியர்களை பயன்படுத்துவது மிக பாரதூரமான தவறாகும். இலங்கையில் எண்பதுகளின் நடுப்பகுதியில் சிறுவர்களை உடல்ரீதியான துஷ்பிரயோகம் செய்வது தவறென்றும், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பாரிய தவறென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

3.3 ஆகவே, பாடசாலையினுள் மாணவ மாணவியர்கள் எந்தவிதமான துஷ்பிரயோகத்துக்கும் ஆளாகாமல் தடுப்பது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். பாடசாலையினுள் மாணவ மாணவியர்களுக்கு பாலியல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், அது உண்மையென நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக வேண்டி நேரிடும் என்பதை விசேடமாக வலியுறுத்துகின்றேன். பாடசாலையினுள் கற்பித்தல், கற்றல் செயற்பாடும் உள்ளடங்கலாக பாடசாலையினுள் இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை ஏற்படும் விதத்தில் ஒழுக்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு, பாடசாலையின் கல்வி அல்லது கல்விசாரா பணியாட் குழு உறுப்பினர்கள் மாணவர்களை ஒருபோதும் தூண்டிவிடக் கூடாது. ஒழுக்கத்துக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு மாணவர்களை குறிப்பிட்ட குழுவினர் தூண்டி விட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மாணவர்களைத் தூண்டிவிட்டமைக்காக குறிப்பிட்ட குழு அல்லது நபருக்கு கடுமையான தண்டனை வழங்க முடியும்.

மேலும், இவ்வாறு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகையில் மேலே 2.3, I மற்றும் II இல் குறிப்பிடப்படும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பதையும் குறிப்பிடுகின்றேன்.

4.0 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான சகல விசாரணைகளினதும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளினதும் தேர்ச்சியை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட ஏராளமான விசேட தத்துவங்களைக் கொண்டதாக 1998ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார சபை தமது தத்துவங்களை அமுல்படுத்துகையில் மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்விப் பணிப்பாளர்கள் அல்லது பாடசாலை தலைவர்களிடம் யாதேனும் உதவிகளைக் கோரும் பட்சத்தில், தமது உயரிய பங்களிப்பினை இவற்றுக்கு வழங்குமாறும் இத்தால் அறிவுறுத்துகின்றேன்.

மேலும், மனிதாபிமானமற்ற ரீதியிலும், உடல், உள்ளத்தை வருத்தும் வகையிலும் தண்டனை வழங்குவதிலிருந்து விலகி, பாடசாலையினுள் ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், பாடசாலையினுள் சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகள் இடம்பெறாத ஒரு சூழலை உருவாக்குவதில் கவனமாயிருத்தல் வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். இந்த நோக்கத்தை அடையும் நோக்கில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

டபிள்யு.எம். பந்துசேன
செயலாளர்
கல்வி அமைச்சு

Post a Comment

0 Comments