>

ad

teacher transfer procedures in Tamil (2023)



அறிமுகம்.

அரச சேவையில் காணப்படுகின்ற அனைத்து சேவைகளுக்கும் இடமாற்றம் என்ற பொதுவான நடைமுறை  காணப்படுகின்றது. தொழிலில் ஈடுபடுவோர் ஒரே இடத்தில் தேங்கியிருப்பதன் காரணமாக நிறுவனத்திற்கும் தொழில் புரிகின்றவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை நிவர்த்தி செய்துகொள்வதே இந்த இடமாற்றச் செயன்முறையின் முக்கிய நோக்கமாகும்.  ஆரம்ப காலங்களில் இடமாற்றம் செய்கின்ற அதிகாரம் நிமன அதிகாரி அல்லது அவரினால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி ஒருவரிடம் காணப்பட்டதுடன் பிற்காலங்களில் இடமாற்ற சபை என்ற பொதுவான குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த சபையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இடமாற்றம் வழங்குகின்ற நடைமுறை அமுலுக்கு வந்தது. அந்த அடிப்படையில் இடமாற்றம் தொடர்பான தாபன விதிக் கோவையின் விதிமுறைகள் மற்றும் இடமாற்றம் தொடர்பான சுற்று நிருபங்களின் அடிப்படையில் ஆசிரியர் இடமாற்றம் குறித்து முழுமையான தௌிவு இந்தப் பதிவின் ஊடாக வழங்கப்படுகின்றது. 

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள். 


ஆசிரியர் இடமாற்றங்கள் பொதுவாகவே 5 முறைகளில் இடம்பெறுவதுண்டு.

01. ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பேரில் நடைபெறும் இடமாற்றம்.
02. மிக அவசரதேவை , விசேட சந்தர்ப்பங்களில்  அல்லது கடும் சுகயீனம் காரணமாக வழங்கப்படுகின்ற இடமாற்றங்கள்
3. சேவை அவசிப்பாடு காரணமாக வழங்கப்படுகின்ற இடமாற்றம்
4. வருடாந்த இடமாற்றம்.
5. ஆசிரியர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் இன்னுமொரு ஆசிரியருடன் மேற்கொள்கின்ற ஒத்துமாறல் இடமாற்றம்

01. ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பேரில் நடைபெறும் இடமாற்றம்.


யாராவது ஒரு ஆசிரியர் ஒழுக்காற்று செயற்பாடு ஒன்றில் ஈடுபடுகின்ற போது அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நியமன அதிகாரியினால் நடாத்தப்படும். இந்த விசாரணை நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த ஆசிரியர் அதே இடத்தில் சேவையாற்றுவது விசாரணைகளுக்கு தடங்கலாக அமையலாம் என்ற அடிப்படையில்  இடமாற்றம் வழங்கப்படலாம்.  இது பொதுவாக தற்காலிக இடமாற்றமாகவே கருதப்படும் சிலபோது விசாரணையின் முடிவில் குறித்த ஆசிரியர் அதே இடத்திற்கு திரும்ப நியமிக்கப்பட முடியும் என்பதுடன் வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்வதற்கு அல்லது மற்றுமொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

இது தவிர ஒழுக்காற்று விசாரணை முடிவில் தண்டனையாகவோ அல்லது வேறு காரணங்கள் காட்டியோ ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படலாம். இது தொடர்பில் ஒழுக்காற்றுக் கட்டளையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.


02. மிக அவசரதேவை , விசேட சந்தர்ப்பங்களில்  அல்லது கடும் சுகயீனம் காரணமாக வழங்கப்படுகின்ற இடமாற்றங்கள்


மிக அவசரத் தேவை அல்லது  விசேட சந்தர்ப்பங்களில்  இடமாறாறம் வழங்கல்- 

இந்த இட மாற்றமானது பல்வேறு காரணங்களை அடிப்பயைாகக் கொண்டு இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு ஆசிரியருக்கு குறித்த பாடசாலையில் பணியாற்றுவதற்கு அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் தொடர்ந்தும் அவரால் அங்கு பணியாற்ற முடியாது என்பதாக குறித்த ஆசிரியரோ அல்லது வேறு தரப்பினர்களோ கருதுமிடத்து அல்லது கோரிக்கை விடுக்குமிடத்து அந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்படுகின்ற இடமாற்றத்தினை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்த இடமமாற்றமானது நியமன அதிகாரிகாரியினால் அல்லது அவரினால் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தரினால் வழங்கப்படுவதுண்டு. இந்த வகையான இடமாற்றங்கள் வழங்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் உரிய முறைகளில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த பிரச்சினைகள் தொடர்பான சான்றுகள் வழங்கப்பட்டு உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

சுகயீனம் காரணமாக வழங்கப்படுகின்ற இடமாற்றங்கள்


ஏதாவது ஒரு பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியருக்கு அந்த பாடசாலை காணப்படுகின்ற இடத்தின் காலநிலை தனது உடல் நலத்தைப் பாதிக்கின்றது எனும் போது, அல்லது குறித்த ஆசிரியர் தனது வசிப்பிடத்திலிருந்து சேவை தளத்திற்காக நீண்ட தூர பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும் நிலையில் இவ்வாறு நீண்ட தூரம் பயணிப்பதால் அவரிடம் காணப்படுகின்ற நோய் நிலை  இன்னும் தீவிரமாகும் என்ற நிலையில் இடமாற்றம் ஒன்றிற்கான கோரிக்கை விடுக்கலாம். இதற்காக வைத்தியரின் பரிந்துரையும் நோய் குரித்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த இடமற்றம் வழங்குவதற்காக வைத்தியர் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு அவைகளுக்கு ஏற்ப இடமாற்றம் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தற்காலிக இணைப்பு

கர்பிணித் தாய் ஒருவர்   வைத்திய காரணங்களுக்காக தனது நிரந்தர வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் கோர முடியும் என்பதுடன் தனது குழந்தைக்கு ஒரு வருடங்கள் பூர்த்தியாகும் வரையில் தனது நிரந்தர வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலையில் பணியாற்றுவதற்கான உரிமையினையும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வைத்திய குழுவின் பரிந்துரை அவசியமில்லை என்பதுடன் மகப்பேற்று வைத்தியரின் வைத்திய அறிக்கை போதுமானதாகும். அந்த வைத்தி அறிக்கையில் Risk என்பதாக குறிப்பிடப்படவேண்டும். இது பொதுவாக சிவப்பு நிறத்தில் நிறந்தீட்டப்பட்டிருக்கும்.  இந்த அடிப்படையிலான இடமாற்றங்களுக்கு கர்பிணித் தாய்மார்கள் தங்களது கோரிக்கையினை முன்வைப்பது கட்டாயமானதாகும்.

வேறு சந்தர்ப்பங்கள்.


ஆசிரியர்கள் தங்களது சுகாதார காரணங்களுக்கு மேலதிகமாக தங்களுக்கு நேரடியாக அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய சில வேறு நபர்களின் சுகாதார காரணங்களுக்காகவும் இடமாற்றம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக கல்வி அமைச்சின் 2007/20 எனும் இலக்கமிடப்பட்ட தேசிய இடமாற்றக் கொள்கை எனும் தலைப்பிலான சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த அடிப்படையில் தங்களது பிள்ளைகள், தங்களது பெற்றோர், மற்றும் பெண் ஆசிரியர்களின் கணவன்மாரினது பெற்றோர்கள் போன்றவர்களின் சுகாதாரக் காரணங்களுக்காக இடமாற்றம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும். 

மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் இடம்பெறுகின்ற இடம் மாற்றத்திற்காக ஆசிரியர் இடமாற்ற சபையின் பரிந்துரைகள் அவசியப்படுவதில்லை.

3. சேவை அவசிப்பாடு காரணமாக வழங்கப்படுகின்ற இடமாற்றம்.


ஏதாவது ஒரு பாடசாலைக்கு குறித்த ஆசிரியர் ஒருவரின் தேவைப்பாடு காணப்படுமிடத்து  இந்த வகையான இடமாற்றம் இடம்பெறுவதுண்டு. இந்த இடமாற்றத்திற்கும் ஆசிரியர் இடமாற்ற சபையின் பரிந்துரைகள் அவசியம் இல்லை என்பதுடன் மேற்படி இடமாற்றம் நடைபெற்று இரண்டு வார காலத்துக்குள் ஆசிரியர் இடமாற்ற சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபையின்  ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.

4. ஒத்துமாறல் இடமாற்றம்

ஏதாவது ஒரு பாசாலையில் கடமை புரிகின்ற ஆசிரியர் ஒருவர் வேறு ஏதாவது ஒரு பாடசாலையில் பணிபுரிகின்ற அவரது நியமனத்தினை ஒத்த நியமனத்தையுடைய ஒருவரை தனது பாடசாலைக்கு பெற்றுக்கொண்டு அவர் பணிபுரிகின்ற பாடசாலைக்கு தான் இடமாற்றம் ​பெற்றுச் செல்வது ஒத்துமாறல் இடமாற்றம் எனப்படும். (இந்த இடமாற்றத்திற்கும் இடமாற்ற சபையின் பரிந்துரைகள் அவசியப்படுவதில்லை)

5. வருடாந்த இடமாற்றம்.


ஆசிரியர்கள் தற்போது பணி புரிகின்ற பாடசாலையில் தாம் பணியாற்றிய சேவைக் காலம் முடிவடையும் போது அல்லது ஆசிரியர் தனது சுய விருப்பத்தின் பேரில் வேறு பாடசாலை ஒன்றிற்கு இடமாற்றம் செல்வதற்கு விரும்புகின்றபோது வேறு ஏதேனும் காரணங்களின் அடிப்படையில் வருடா வருடம் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டு வழங்கப்படுகின்ற இடமாற்றம் வருடாந்த இடமாற்றம் என்பதாகக் கருதப்படும் இந்த இடமாற்றமானது முற்று முழுதாகவே ஆசிரியர் இடமாற்ற சபையில் பரிந்துரைகளின் பேரில் மாத்திரமே இடம் பெறுவதுண்டு.

எப்படியாயினும் மேலே 01 முதல் 04 வரையில் குறிப்பிடப்பட்ட இடமாற்றங்கள் வருடத்தின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம் என்பதுடன் ஏனைய அனைத்துவிதமான இடமற்றங்களும் (ஆசிரியரின் கோரிக்கை இன்றி இடம்பெறுகின்ற இடமாற்றங்களும் வருடத்தில் ஒரு முறை சுற்று நிருபங்களில் குறிப்பிடப்பட்ட தினங்களில் நடைபெற வேண்டும்.)

இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு முன்னதாக உங்களது சயவிவரக் கோவையானது பூரணப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் அந்த வகையில் உங்களது சுய விவரக் கோவையின் இருக்க வேண்டி 112 ஆவணங்கள் தொடரபில் அறிந்துகொள்ள கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும். 

ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெறுகின்ற முறைகள். 

தேசிய பாடசாலைகள் மாகாணப் பாடசாலைகள் என இரண்டு அமைப்புக்கள் காணப்படுவதனால் அந்த இரண்டு வகையான பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்கள் வேறு வேறு விதமான நடைமுகளுக்கு அமைய இடம்பெறுகின்றன. அந்த அடிப்படையில் தேசிய பாடசாலைகள் தொடர்பிலான இடமாற்றங்கள் கல்வி அமைச்சின் ஊடாகவும் மாகாண சபைகளுக்கான இடமாற்றங்கள் மகாணங்களின் கல்வி அமைச்சு வலயக் கல்விக் காரியாலயங்கள் என்பவற்றின் ஊடாகவும் செயற்படுத்தப்படுகின்றன. 

தேசிய பாடசாலை இடமாற்றங்கள் எனும் போது 
01. தேசிய பாடசாலைகளுக்கு இடையான இடமாற்றம்
02. தேசிய பாடசாலைகளிலுருந்து மாகாண பாடசாலைகளுக்கான இடமாற்றம் என இரண்டு வகைளில் நடைபெறுவதுடன் 

 மாகாணப் பாடசாலை இடமாற்றங்கள் கீழே குறிப்பிடப்படுகின்ற மூன்று அடிப்படைகளில் நடைபெறுவதுண்டு.

 1. வலயத்தினுள்ளே இடம்பெறுகின்ற இடமாற்றம்
2. மாகாணத்துக்குள்ளே பெறுகின் இடமாற்றம்
3. மாகாணங்களுக்கு இடையே இடம்பெறுகின்ற இடமாற்றங்கள்.
4.மாகாணப் பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்ங்கள்

எப்படியாயினும் இடமாற்றங்கள் தொடர்பில் கீழ்க்குறிப்பிடப்படும் நடைமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 

இடமாற்றங்களுக்காக விண்ணப்பம் கோரல் 

ஒவ்வொரு இடமாற்றத்திற்கும் விண்ணப்பிக்கின்ற முறைகள் வேறுபடுகின்றது. அந்த அடிப்படையில் வருடாந்த இடமாற்ற விண்ணப்ப முறைகள் குறித்து இந்தப் பதிவில் குறிப்பிடுவதுடன் ஏனைய இடமாற்ற விண்ணப்பங்கள் தொடர்பில் பின்னர் குறிப்பிடப்படும்.

கல்வி அமைச்சின் 2007/20 எனும் இலக்கமிடப்பட்ட தேசிய இடமாற்றக் கொள்கை எனும் தலைப்பிலான சுற்றுநிருபத்தின் விதிமுறைகளுக்கு அமைய  ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் 30 திகதி வரையில் கோரப்பட வேண்டும் 

வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள்.


வருடாந்த இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்


01. பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்ல விரும்புகின்றவர்கள் எவராயினும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். (இவர்கள் தமது நியமனக் கடித்தத்தில் அப்பாடசாலையில் சேவையாற்ற வேண்டிய கட்டாய சேவைக் காலம் குறிப்பிடப்பட்டிருப்பின் அக் காலத்தினை பூர்த்தி செய்திருக்க வேண்டும், கட்டாய சேவைக்காலம் முதல் நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லையாயின் முதல் நியமனம் பெற்ற வலயத்தினுல் 5 வருட சேவையினைப் பூர்த்தி செய்தவர்கள் வலயத்திற்கு வௌியேயான இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கலாம். )

02. குறித்த பாடசாலையின் உரிய காலத்தை விட கூடிய காலம் சேவையாற்றுகின்றவர்கள் என இடமாற்ற அதிகாரிகளினால் அடையாளம் காணப்படுகின்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது ஒருவர் ஒரு பாடசாலையில் பணியாற்ற முடியுமான  உச்ச கால அளவு (இது 5 முதல் 8 வருடங்கள் என்பதாக குறிப்பிடப்படுகின்றது) காலத்தினைப் பூர்த்தி செய்கின்றவர்கள் வேறு ஒரு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதாக இடமாற்றத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் முடிவெடுத்து அவ்வாறானவர்களின் பட்டியலை தயாரிப்பார்கள். இவர்களும் இடமாற்றத்திற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறானவர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காத போது இடமாற்ற அதிகாரிகள் இவர்களுக்கான இடமாற்ற உத்தரவினை பிறப்பிப்பதற்கு இடமிருக்கின்றது.

கோரிக்கை  இல்லாத நிலையில் வருடாந்த இடமாற்றம் வழங்க முடியாதவர்கள் 

யாரேனும் ஒரு ஆசிரியர் 55 வயதினைப் பூர்த்தி செய்துவிடுவாரானால் (இது சில மாகாணங்களின் நடைமுறைகளுக்கு அமைய 57 வயது என்பாதாகவும் பின்பற்றப்படுகின்றது என்பதனைக் கவனத்தில்கொள்க) அவரது கோரிக்கை இல்லாமல் அந்த ஆசிரியருக்கு இடமற்றம் வழங்க முடியாது. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இடமாற்றம் கோருவாரானால் அது தொடர்பில் இடமாற்ற விண்ணப்பம் கவனத்தில் ஏற்கப்படல் வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல் கட்டுரைகளின் தொகுப்பு  கீழ்க்கு குறிப்பிடும் லிங்கில் தரப்படுகின்றது. படித்துப் பயன் பெறுங்கள் 

வருடாந்த இடமாற்றம் இடம்பெறுகின்ற முறைகள்


1.. வலயத்தினுள்ளே உள்ள பாடசாலைகளுக்கிடையிலான இடமாற்றம்


ஒரு கல்வி வலயத்தின் நிர்வாக எல்லைக்குள் கடமையாற்றுகின்ற ஆசிரியர் ஒருவர் அதே கல்வி  வலயத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வேறு ஒரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குவது வலயத்துக்குள்ளேயான ஆசிரியர் இடமாற்றம் என்பதாகக் குறிப்பிடப்படும். இந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஆசிரியர்களிடம் கோரப்பட்டு அதன் பின்னர் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைகளுக்காக ஆசிரியர் இடமாற்ற சபையிடம் சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர் இடமாற்ற சபையின் பரிந்துரைக்கு அமைவாக இந்த இடமாற்றங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். 

2. மாகாணச் சபைக்குள்ளே வலயங்களுக்கு இடையேயான இடமாற்றங்கள்

இது ஆசிரியர் இடமாற்றத்தின் இரண்டாவது முறையாகும். இங்கு ஒரு கல்வி வலயத்தின் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற ஆசிரியர் ஒருவர் அந்த பாடசாலை காணப்படுகின்ற மாகாண எல்லைக்குள் அமைந்துள்ள மற்றுமொரு கல்வி வலயத்தின் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற பாடசாலை ஒன்றிற்கு இடமாற்றம் கேட்டிருக்கும் போது இது மாகாண சபைக்குள்ளேயான இடமாற்றம் என்பதாக அழைக்கப்படும். 

இவ்வாறான விண்ணப்பங்கள் கிடைக்கும் போது முதல் கட்டமாக வலயக் கல்விக் காரியாலயங்களின் ஆசிரியர் இடமாற்ற சபையில் சமர்ப்பிக்கப்பட்டு குறித்த சபையின் பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டு மாகாண கல்வித் திணைக்களங்களில் இயங்குகின்ற இடமாற்ற சபைக்கு அனுப்பி வைக்கப்படும்.  அதன் பின்னர் மாகாண கல்வித் திணைக்களங்களில் அமைந்துள்ள ஆசிரியர் இடமாற்ற சபைகளின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த ஆசிரியர் இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற வலயக் கல்விக் காரியாலயத்தினால் இடமாற்றக் கடிதங்கள் குறித்த ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும்.  

  3. மாகாணங்களுக்கு வௌியே வழங்கப்படுகின்ற இடமாற்றம்.

மாகாண சபைக்கு வெளியே அனுப்பவுதற்காகவும் வெளி மாகாணங்களிலிருந்து தமது மாகாண சபைக்கு பெற்றுக் கொள்வதற்காகவும் வழங்கப்படுகின்ற இடமாற்றங்கள் மாகாணங்களுக்கு வௌியேயான இடமாற்றங்கள் என்பதகக் குறிப்பிடப்படும். 

இந்த வருடாந்த இடமாற்றங்கள் வலய ஆசிரியர் இடமாற்றச் சபைகள் மற்றும் மாகாண ஆசரியர் இடமாற்றச் சபைகள் என்பவற்றின் ஊடாகமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் விதந்துரைகள் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் குறித்த விண்ணப்பங்கள் இடமாற்றம் கோரப்படுகின்ற மாகாண  சபையின் அரச சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படுகின்ற  இடமாற்ற விண்ணப்பங்கள் குறித்த மாகாணத்தின் மாகாணக் கல்வியமைச்சின் செயலாளருக்கும்/ மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பப்படும்.


இடமாற்ற விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல்

ஒவ்வொரு மாகாணமும் அவர்களுக்கேயான அடிப்படையில் இடமாற்ற விண்ணப்பங்களைத் தயாரித்து வைத்திருக்கும். இடமாற்றம் பெறுகின்ற ஆசிரியர்கள் தாம் இடமாற்றம் கோருகின்ற பாடசாலையின் அமைவிடத்திற்கு ஏற்ப வெவ்வேறு எண்ணிக்கைகளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வலயத்துக்குள்ளான இடமாற்றத்திற்கு 2 படிவங்கள்
மாகாணத்துக்குள்ளான விண்ணப்பங்களாயில் 3 படிவங்கள்
மாகாணங்களுக்கு வௌியே மற்றும் தேசிய பாடசாலைகளுக்காயின் 5 படிவங்கள் என சமர்ப்பிக் வேண்டும்.

சில மாகாணங்களில் இடமாற்ற விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்படும். இந்த ஒன்லைன விண்ணப்பங்கள் மாகாணத்துக்கு உள்ளாலான இடமாற்றங்களுக்கு மாத்திரமே செல்லுபடியகும் என்பதுடன் மாகாணங்களுக்கு வௌியே அல்லது தேசிய பாடசாலைகளுக்கான விண்ணப்பங்கள் அச்சிட்ட விண்ணப்பங்களாக குறித்த எண்ணிக்கையில் சமர்ப்பிக்கப்படவேண்டும். 

மாகாணத்துக்கு வௌியேயான இடமாற்றங்களுக்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கின்ற போது சில ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை கீழக்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து பார்வையிடலாம்.  இங்கு சபரகழுவ மாகாணத்தின் சுற்றுநிரும் தரப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களே அனைத்து மாகாணங்களிலும் கேட்கப்படுகின்றது என்பதனைக் கவனத்தில் கொள்க 


விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் முதல் இடமாற்றம் வழங்குவது வரையிலான நடமவடிக்கைகள் கீழ்க்குறிப்பிடும் படிமுறைகளில் அமைகின்றது.


படிமுறை 01

இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்து அதிபரின் சிபாரிசுக்காக அதிபரிடம் ஒப்படைத்தல்.

படிமுறை 02 

02. இவ்வாறு பெற்றுக்கொள்கின்ற விண்ணப்பங்களில் ஆசிரியரை பதிலீட்டுடன் அல்லது பதிலீடு இன்றி  விடுவிக்க முடியும்  என்ற தனது பரிந்துரையினை இட்டு வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆசிரிய இடமாற்றம் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்கின்ற அதிகாரம் அதிபருக்கு இல்லை என்பதனால் குறித்த ஆசிரியர் இடமாற்றம் பெற்றுச் செல்வதனை தான் அனுமதிக்கப் போவதில்லை என்ற பாணியில் ஆசிரியர் வழங்குகின்ற விண்ணப்பங்களை ஏற்க மறுத்தல் அல்லது விண்ணப்பங்களை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அனுப்பாமல் தன்வசம் வைத்திருத்தல் அல்லது விண்ணப்பத்தை தாமாக நிராகரித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அதிபருக்கு அதிகாரமில்லை. ஆசிரியர் வழங்குகின்ற விண்ணப்பப்படிவத்தினை தனது பரிந்துரையை இட்டு முடிந்தளவு அவசரமாக வலயக் கல்விக் காரியாலயத்துக்கு அனுப்பிவைப்பது அதிபரின் பொறுப்பாகும். 

படிமுறை 03 


வலயத்திற்கு அனுப்பப்படுகின்ற விண்ணப்பங்கள் வலயத்தில் இடமாற்றத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களால் பட்டியலிடப்படும். அதன் பின்னர் இடமாற்ற சபைகள் கூட்டப்பட்டு அந்த சபையின் ஒப்புதலுக்காக விண்ணப்பங்கள் வழங்கப்படும். அந்த சபையில் அதிபரின் பரிந்துரை கருத்தில்கொள்ளப்பட்ட அடிப்படையில் இடமாற்ற சபையின் பரிந்திரை குறிக்கப்படும். வலயத்துக்குள்ளான இடமாற்றங்களைப் பொறுத்த வரையில் மாற்றீடுடன் அல்லது மாற்றீடு இன்றி என எந்த வகையில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றாலும் இந்த இரண்டு வகையான இடமாற்றங்களும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இடமாற்றம்  அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய குறிப்புகள் இடப்பட்டு ஆசிரியர் இடமாற்ற சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

இடமாற்ற சபையின் ஒப்புதல்களுக்கு அமைய வலயத்துக்குள் இடமாற்றம் கோரியவர்களில் ஒரு பாடசாலையில் குறிப்பிட்ட காலத்துக்கு அதிகமான காலங்கள் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும். அத்துடன் ஏனைய காரணங்களுக்காக இடமாற்றம் கோரிய ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

இந்த இடமாற்றம் வழங்கப்படும்போது விண்ணப்பத்தில் தான் கோருகின்ற பாடசாலைப் பட்டியலில் குறிப்பிடப்படுகின்றவைகளுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு முடிந்தளவில் முயற்சிக்குமாறு ஆசிரியர் இடமாற்ற சபைக்கு தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையின் ஊடாக அறிவுறுதப்பட்டுள்ளது. 

படிமுறை 04


வலயக் காரியலயத்திற்கு கிடைக்கின்ற விண்ணப்பங்களில் வலயத்துக்குள் மேற்கொள்ளப்படுகின்ற இடமாற்றங்கள் இடமாற்ற சபையின் ஒப்புதல்களுக்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளரினால் அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும். அதனையடுத்து இடாற்றம் பெற்றுக்கொண்டவர்களுக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும். அத்துடன் மாகாணத்துக்குள் மாகாணத்துக்கு வௌியே என்பதாக இடாற்றம் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அவைகள் பதில் ஆசிரியர் சகிதம் பதில் ஆசிரியர் இன்றி என்பதாகவும் விடுவிக்கலாம் விடுவிக்க முடியாது என கிடைத்துள்ள அனைத்து விண்ணப்பங்களையும் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

இங்கு வலயத்துக்கு வௌியே இடமாற்றம் கேட்கப்பட்ட பாடங்களுக்குரிய ஆசிரியர் பற்றாக்குறை இருப்பினும் கூட அவைகள் குறிப்பாக இடப்பட்டு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்பதாக கிழக்கு மாகாணப் பணிப்பாளரின் 2021 இடமாற்றம் தொடர்பான அறிவித்தல் கடிதத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடிப்படையில் வலயக் கல்விக் காரியாலயமும் தங்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து விண்ணப்பங்களையும் தங்களது பரிந்துரைகளை இட்டு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது இதிலிருந்து தௌிவாகின்றது.

படிமுறை 05 


மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற விண்ணப்பங்களில் மாகாணத்தினுல் வலயங்களுக்கிடையான இடாமற்ற விண்ணப்பங்கள் இடமாற்ற சபைக்கு வழங்கப்பட்டு அவைகள் பரிசீலனை செய்யப்படும். இங்கு பிரதியீடு இல்லாமல் அதிபரும், வலய இடமாற்ற சபையும் சிபாரிசு செய்திருக்கின்ற விண்ணப்பங்கள் அனைத்துக்கும் இடமாற்றம் வழங்கப்படும். அடத்து பிரதியீடு சகிதம் பரிந்துரை வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் ஒப்பு நோக்கப்பட்டு வலயங்களுக்கிடையிலான சமநிலையினைப் பேணுகின்ற அடிப்படையில் முடிந்தளவு இடமாற்றங்கள் வழங்கப்படும். 

படிமுறை 06


மாகாணத்தினுள்ளான இடமாற்றங்களைத் தொடர்ந்து மாகாணத்துக்கு வௌியேயான இடமாற்ற விண்ணப்பங்கள் மாகாண இடமாற்ற சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அவற்றினது பரிந்துரையுடன் மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.  பிரதியீடு இன்றி விடுதலை செய்ய முடியுமான விண்ணப்பங்கள் அனைத்தும் மாகாண கல்வித் திணைக்ளத்திற்கு அனுப்பப்டுவதுடன் பிரதியீடு சகிதம் சிபாரிசு செய்யப்படுகின்ற விண்ணப்பங்கள் அனைத்துமோ அல்லது அதன் ஒரு பகுதியோ மாகாண கல்வுி அமைச்சுக்கு அனுப்பப்டலாம். இங்கு மாகாணத்தின் ஆளணியின் தொகை கருத்தில் கொள்ளப்படுகின்றமையினால் சில விண்ணப்பங்கள் இறுத்தி வைக்கப்படும். இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்ற தொகையானது மாகாணங்களுக்கிடையிலான இடமாற்ற எண்ணிக்கியினைத் தீர்மானிப்பதற்கான நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய குறிப்பிட்ட எண்ணிக்கை மாத்திரமே இங்கு விடுவிக்கப்படும்.

படிமுறை 07. 

இங்கு அதிபரும், வலய இடமாற்ற சபையும் பிரதியீடு இன்றி இடமாற்றம் வழங்குவதற்கு சிபாரிசு செய்கின்ற விண்ணப்பங்களும் பிரதியீடுடன் சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்களும்  அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும்.  

படிமுறை 08.

மாகாண கல்வித் திணைக்களத்திலிருந்து கிடைகப்பபெற்ற விண்ணப்பங்கள் மாகாண அரச சேகைள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்காக ஆணைக்குவில் சமர்க்கப்படும். அதனை அடுத்து. ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய அடு்த கட்டமாக இடமாற்றம் கோரப்படுகின்ற மாகாணத்திற்கு இந்த ஆசிரியரை இணைத்துக்கொள்வதற்கு சம்மதம் வினவிக்கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

படிமுறை 09.

குறித்த ஆசிரியர் இடமாற்றம் கேட்கின்ற மாகாணத்தின் அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைகப்பெற்ற கடிதம் குறித்த ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதனது சிபாரிசுக்கு அமைய அதனை  அந்த மாகாணத்தின் கல்வி அமைச்சிற்கு குறித்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும்.  

படிமுறை 10


குறித்த விண்ணப்பம் இடமற்றம் பெற்றுச் செல்கின்ற மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்ததன் பின்னர் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள வலயக் கல்விக் காரியலாயத்திற்கு இந்த ஆசிரியரைப் பெற்றுக்கொள்வதற்கு சம்மதமா என்பதாக வினவப்படும். 

படிமுறை 11


குறித்த ஆசிரியரை இணைத்துக் கொள்வதற்கான வெற்றிடங்கள் வலயத்தில் காணப்படுமிடத்து தமது சம்மதத்தினை மாகாணக் கல்வித் திணைக்களம் ஊடாக மாகாணக் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும்.

படிமுறை 12.


அடுத்து மேற்படி சம்மதம் தொடர்பான விபரம் அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு கல்வி அமைச்சின் ஊடாக அறிவிக்கப்படும். 

படிமுறை 13. 


மேற்படி கடிதம் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்ததன் பின்னர். குறித்த ஆசிரியரை குறித்த வலையத்தில் இணைத்துக்கொள்வதற்கு சம்மதம் என்பதாகவும். குறித்த ஆசிரியரை விடுவிப்பதற்கு நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறும் குறித்த ஆசிரியர் பணியாற்றுகின்ற மாகாணத்தின் அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும்.

படிமுறை 14.


அடுத்து மேற்படி கடிதத்தினைத் தொடர்ந்து மாகாணக் காரியாலயம், வலயக் காரியாலம், குறித்த பாடசாலை அதிபர் ஆகியோருக்கு குறித்த ஆசிரியரை விடுவிக்குமாறு அறிவித்தல் வழங்கப்படும்.

படிமுறை 15

இந்த அறிவித்தலுக்கு அமைவாக குறித்த ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருட்கள் மற்றும் கடமைகள் என்பவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டு. பொருட்களைப் பொருப்பேற்றதற்காக ஒரு கடிதமும் பாடசாலையின் பொருப்புகளிலிருந்து விடுத்ததற்காக இன்னுமொரு கடிதமும் வழங்கவேண்டும். இந்தக் கடிதங்களில் மூன்று மூலப் பிரதிகளை இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர் பெற்றுக்கொள்வது தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும். 

1. ஒரு பிரதி இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற மாகாணத்தின் அரச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு (இந்தப் பிரதி முன்னைய மாகாண சபையினால் அனுப்பி வைக்கப்படாலம். எனினும் முன்னெச்சரிக்கைக்காக ஒரு பிரதியை வைத்திருப்பது சிறந்தது)
2. அடுத்த பிரதி உங்களது சுய விவரக் கோவைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
3. அடுத்த பிரதி சம்பளம் தயாரிப்பதற்காக வலயத்தின் கணக்குப் பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்

படிமுறை 16

மேற்படி அதிபரின் விடுவித்தல் கடிதம் வலயக் கல்விக் காரியாலயம், மாகாண கல்வித் திணைக்களம், மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அதன் ஊடாக இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற மாகாணத்தின் அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். (இந்த சந்தர்ப்பாத்தில் குறித்த ஆசிரியர் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இரண்டு மாகாண சேவைகள் ஆணைக்குழுக்கள் இடையே பரிமாற்றப்படும்.)

படிமுறை 17

இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற மாகாணத்தின் அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் கிடைத்ததன் பின்னர் மாகாண கல்வி அமைச்சுக்கு குறித்த ஆசிரியரை இணைத்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்படும்.

படிமுறை 18

மேற்படி அறிவித்தலைத் தொடர்ந்து மாகாண கல்வித் திணைக்களத்துக்கு மேற்படி ஆசிரியரை இணைத்துக் கொள்வதற்கான கடிதம் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும்.

படிமுறை 19

இந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கல்வித் திணைக்களம் குறித்த பாடசலைக்கு இடமாற்ற உத்தரவை வழக்கவோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாடசாலை ஒன்றினை வழங்குமாறு கோரியோ கடிதம் ஒன்றினை அனுப்பிவைக்கும். 

படிமுறை 20

தமது வலயத்தில் குறித்த பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குகின்ற கடிதத்தினை வலயக்கல்விப் பணிப்பாளர் குறித்த ஆசிரியருக்கும் குறித்த பாடசாலை அதிபருக்கும் அனுப்பி வைப்பார்.. 

படிமுறை 21

குறித்த கடிதத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட பாடசாலையில் சேவையினைப் பொறுப்பேற்று குறித்த கடிதத்தையும் சம்பவத் திரட்டுப் பதிவையும்  முன்னர் பணியாற்றி பாடசாலையில் பெற்றுக்கொண்ட பொருட்கள் மீளக்கையளித்தல் மற்றும் விடுவித்தல் கடிதங்கள் இரண்டையும் இடமாற்றக் கடிதத்துடன்  வலயக் கல்விக் காரியாலயத்தின் தாபனப் பிரிவில் கோவை ஒன்றினைத் திறப்பதற்காகவும் உங்களுக்கான சம்பளத்தினை வழங்குவதற்காக கணக்குப் பிரிவின் சம்பளப் பகுதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

படிமுறை 22

அதனை அடுத்து தாபனப் பிரிவு உங்களது முன்னைய பாடசாலையின் வலயக் கல்விக் காரியாலயத்திற்கு நீங்கள் இங்கு பதவி ஏற்ற விபரத்தினை அறிவித்து உங்களது சுய விவரக் கோவையினைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும். 

இடமாற்ற சபைகள். 


  வலய மட்டத்திலான ஆசிரியர் இடமாற்ற சபைகள் வலயக் கல்விக் காரியாலயங்களிலும் மாகாண மட்டத்திலான இடமாற்ற சபைகள் மாகாணக் கல்விக் காரியாலயங்களிலும் ஆசிரியர் இடமாற்றச் சபைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதாக ஆசிரியரி இடமாற்றம் தொடர்பான சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவு செய்யும் போது  . பதிவு செய்யப் பெற்றுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் சிபாரிசு செய்யப்படுகினற் சங்கங்களின் பிரதிநிதியொருவர் வீதம் இடமாற்றச் சபையில் அங்கத்துவம் வகிப்பார். 

இங்கு ஆசிரியர் சங்கங்கள் எனப்படுவது சில அரசியல் கட்சிகளின் கீழ் இயங்குகின்ற ஆசிரியர் தொழில்சங்கங்கள் (உதாரணமாக  சுதந்திர ஆசிரியர் சங்கம். ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ) மற்றும் வேறு அடிப்படைகளில் இயங்குகின்ற ஆசிரியர் சங்கங்கள் என யார் யாரெல்லாம் தொழில் சங்கங்களாக பதிவு செய்திருக்கின்றார்களோ அவர்கள் ஒரு பிரதிநிதிரயை இந்த இடமாற்ற சபைக்கு எழுத்து மூலம் பரிந்துரைக்கலாம். அவர்களுக்கு வலயக் கல்விக் காரியாலயம் அல்லது மாகாணக்கல்விக் காரியாலயம் ஊடாக குறித்த சபைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.



இடமாற்றங்கள் தொடர்பிலான ஒப்புதல் பெற்றுக் கொள்ளல் 


 இலங்கை ஆசிரியர் சேவையின் இடமாற்றங்ளானது ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பேரில்,  மிக அவசரதேவைகள் நிமித்தம், விசேட சந்தர்ப்பங்களில் அல்லது கடும் சுகயீனம் காரணமான இடம்பெறுகின்ற இடமாற்றங்கள்  தவிர்ந்த ஏனைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இடமாற்றங்களானது முறையாக அமைக்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றச் சபைகளின் விதந்துரைகளின் படி மட்டுமே, செய்யப்படுதல் வேண்டும் என்பதாகவும,. சேவையின் தேவைப்பாடு கருதி செய்யப்படுகின்ற இடமாற்றங்களாக இருப்பினும் 2 வாரங்களுக்குள்ளாக இடமாற்றச் சபையைக்
கூட்டி அதனை அறிவிக்க வேண்டும் என்பதாகவும். மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபையால் அனுமதிக்கப்பட்ட வலயங்களுக்கிடையிலான இடமாற்றங்களுக்கான கட்டளைக் கடிதங்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள வலயக் கல்விக் காரியாலயத்தினால் அனுப்பப்படுதல் வேண்டும் எனவும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான கல்வி அமைச்சின் சற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான மேற்படி தகவல்கள் தாபனக் கோவை மற்றும் 2007/20 ஆம் இலக்க ஆசிரியர் இடமாற்றத் தேசிய கொள்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு lankajobinfo.com இணையத்தளத்தினால் தொகுக்கப்பட்டது. 




எமது வட்சப் குழுமம் https://chat.whatsapp.com/GlJqm79kSI3J0ZQtEyodZI


 ஒத்துமாறல் (Mutual Transfer) இடமாற்றம் தொடர்பிலும் இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்கான ஏனைய முறைகள் தொடர்பிலும் அடுத்த பதிவில் ஆராய்வோம் எமது வட்சப் குழுமங்களுடன் இணைந்திருங்கள்.