>
எதிர்வரும் 3-4 தினங்களில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நிற்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய தினத்தில் (19) 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலும் 4000 மெட்ரிக் டொன் ஒக்டைன் 92 ரக பெட்ரோலும் 8300 மெட்ரிக் டொன் ஒக்டைன் 95 ரக பெட்ரோலும் மாத்திரமே CPC நிறுவனம் வசம் இருப்பதாகவும் LIOC நிறுவனம் வசம் 10,000 மெட்ரிக் டொன் பெற்றோலும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்வரும் 23ஆம் திகதி பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்றும் 24 ஆம் திகதி டீசல் ஏற்றிய கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடைய இருப்பதாகவும் எதிர்வரும் 29ஆம் திகதியும் ஜூலை 10 ஆம் திகதியும் மசகெண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன்கள் மற்றும் சுகாதார சேவைகள் உட்பட அத்தியாவசிய சேவைகளுக்காக தினங்கள் ஒதுக்கப்பட்ட அடிப்படையில் எரிபொருள் விநியோகிப்பதற்கான திட்டங்கள் அமைக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டுக்கு அவசியமான எரிபொருளினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மாத்திரம் வழங்க முடியாது என்பதுடன் லங்கா IOC போன்ற ஏனைய நிறுவனங்களையும் எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் இணைத்துக் கொள்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்
தற்போது காணப்படுகின்ற நெருக்கடியான நிலையில் முடியுமான அளவில் பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறும் உல்லாசப் பயணங்கள் மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments