அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை உறுதிப்படுத்தும் விசேட கல்வி மற்றும் உட்படுத்தல் கல்வி (Inclusive Education) நடைமுறைகள், பாடசாலை கால அட்டவணையின் வகைகள் மற்றும் கால அட்டவணை தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த முழுமையான வழிகாட்டி இதுவாகும். அதிபர் வழிகாட்டி நூல் (Principal Handbook) அத்தியாயம் 5 (பிரிவு 5.5 மற்றும் 5.6), 01/2016 இலக்கச் சுற்றுநிருபம் மற்றும் 2027 முதல் நடைமுறைக்கு வரும் 2026.10.28 ஆந் திகதிய 32/2026 இலக்கச் சுற்றுநிருபம் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
"அனைவருக்கும் கற்பதற்கான உரிமை உண்டு" என்பதே உட்படுத்தல் கல்வியின் அடிப்படைக் கருப்பொருளாகும். விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் சம வயதுப் பிள்ளைகளுடன் ஒரே சாதாரண வகுப்பறையில் இணைந்து, அவர்களின் பல்வகைமைக்கும் கற்றல் பாங்கிற்கும் ஏற்றவாறு திட்டமிடப்பட்ட தரமான கல்வியை வழங்குவதே உட்படுத்தல் கல்வியாகும் (Inclusive Education). இதன் மூலம் விசேட தேவையுடைய பிள்ளைகள் மேம்படுத்தப்பட்ட சமூகம்சார் மற்றும் கற்றல் வாய்ப்புகளைச் சக மாணவர்களுடன் இணைந்து பெற்றுக்கொள்ள முடிகின்றது.
நிர்வாகப் பொறுப்பு: கல்விச் செயற்பாடுகளிலுள்ள அனைத்து நடைமுறைகளுக்கும் சாதாரணமான வகையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பினை அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் அதிபர் உட்பட அனைவரதும் பொறுப்பாகும். விசேட கல்விப் பிரிவினுள் கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்துவதைப் போன்றே, சாதாரண வகுப்பறைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கால அட்டவணை என்பது பாடசாலையின் செயற்பாடுகளைப் பிரதிபலிக்கும் சட்டகப்படுத்தப்பட்ட வேலை ஒழுங்காகும் (H.G. Stead). மேலும், "கால அட்டவணை என்பது பாடசாலையொன்றின் இரண்டாம் கடிகாரமாகும்" என மொஹியுதீன் (Mohiyddin) குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பாடமும் ஆரம்பிக்கும் நேரம், நிறைவுபெறும் நேரம், இடைவேளை, பாடங்கள், கற்பிக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் இணைக் கலைத்திட்ட நேர ஒதுக்கீடு ஆகிய தகவல்கள் இதில் அடங்கியிருக்கும்.
*(மொபைல் போனில் பார்ப்பவர்கள் அட்டவணையை இடது/வலது பக்கமாக நகர்த்திப் பார்க்கவும்)*
| கால அட்டவணை வகை | விளக்கம் மற்றும் பயன்பாடு |
|---|---|
| 1. பிரதான கால அட்டவணை (Master / General Time Table) |
வாரத்தின் அனைத்துத் தினங்களிலும் பாடசாலையின் ஒட்டுமொத்தப் பணிகள் தொடர்பான திட்டம்; ஒவ்வொரு வகுப்பிற்கும் தாக்கம் செலுத்தும் கால அட்டவணைகளின் தொகுப்பு. |
| 2. வகுப்பு கால அட்டவணை (Class Time Table) |
ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடங்களைக் கற்பித்தல் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரியவாறு வாரத்திற்காக அன்றாடம் ஒதுக்கப்பட்ட நேர விபரம். |
| 3. ஆசிரியர் கால அட்டவணை (Teachers Time Table) |
ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்படும், அவர்களது அன்றாடக் கற்பித்தல் மற்றும் கடமைப் பகிர்வு குறித்த தனிப்பட்ட கால அட்டவணை. |
| 4. பதில் கால அட்டவணை (Relief Time Table) |
ஆசிரியர்கள் விடுமுறையில் இருக்கும் போது, அவர்களின் கற்பித்தல்/செயற்பாட்டுக் காலத்தை இழப்பீடு செய்வதற்காக வேறு ஆசிரியரை நியமித்து அன்றாடம் தயாரிக்கப்படும் திட்டம். |
| 5. விசேட கால அட்டவணைகள் |
• போட்டிகளுக்கான கால அட்டவணை: இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அழகியல் போட்டிகளை நடாத்தும் சந்தர்ப்பங்களுக்கானது. • இணைக்கலைத்திட்ட கால அட்டவணை: பொதுக் கற்பித்தல் நேரத்திற்குப் புறம்பாக இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளுக்கு ஒதுக்கப்படும் நேரம். • பரிகார வேலைத்திட்ட கால அட்டவணை: அடைவு மட்டப் பகுப்பாய்விற்கமைய குறைந்த அடைவு மட்டப் பிள்ளைகளின் விருத்திக்காக ஒதுக்கப்படும் நேரம். |
0 Comments