ad

Education Circular 54/2023 (Part 01): School Development Society (SDS) & Executive Committee (SDEC) Guidelines in Sri Lanka

இலங்கைப் பாடசாலைகளில் பண்புரீதியான, அளவுரீதியான மற்றும் கட்டமைப்புரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள், நிதி முகாமைத்துவம் மற்றும் பெறுகைச் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் கல்வி அமைச்சின் 54/2023 இலக்கச் சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டற் கைநூலின் முதலாம் பாகம் இதுவாகும். 2023.12.29 அன்று வெளியிடப்பட்டு 2024.01.01 முதல் அமுலுக்கு வந்த இச்சுற்றுநிருபம், முன்னைய 26/2018, 19/2019 மற்றும் 05/2015 ஆகிய சுற்றுநிருபங்களை முழுமையாக ரத்துச் செய்துள்ளது.

1. 54/2023 சுற்றுநிருபத்தின் பிரதான நோக்கங்களும் எதிர்பார்க்கப்படும் பேறுகளும்

பொதுத் திறைசேரியின் உடன்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ள இச்சுற்றுநிருபம், 26/2018 சுற்றுநிருபத்தில் வழங்கப்பட்டிருந்த செலவு எல்லைகளை மேலும் அதிகரித்து, பாடசாலை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • 1. தரவு அடிப்படையிலான தீர்மானம்: தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்து, அடிப்படைத் தேவைகளை முன்னுரிமைப்படுத்திப் பாடசாலையை அபிவிருத்தி செய்தல்.
  • 2. வளங்களின் உச்சப் பயன்பாடு: பாடசாலையிலுள்ள வளங்களைப் பயன்மிக்கதாகப் பயன்படுத்தி முழுமையான வினைத்திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்தல்.
  • 3. பங்கேற்பு முகாமைத்துவம்: தர்க்க ரீதியான தீர்மானங்களை எடுக்க நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் நிதி ரீதியான அதிகாரத்தைப் பாடசாலைகளுக்குப் போதியளவு வழங்குதல்.
  • 4. வெளிப்படைத்தன்மை & சமூக நல்லுறவு: வகைகூறலை உறுதிப்படுத்துவதன் மூலம் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவைப் பலப்படுத்துதல்.
  • 5. எதிர்பார்க்கப்படும் பேறுகள்: மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வளர்த்தல், பாடசாலை மட்ட வாண்மைத்துவ ஆசிரியர் அபிவிருத்தி (SBTD), செயல்வழி ஆய்வுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் ஆளணியினரின் தரத்தை உயர்த்துதல்.

2. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (பா.அ.ச / SDS) — கட்டமைப்பும் கூட்டங்களும்

பாடசாலையில் தீர்மானங்களை எடுக்க பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS), பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) மற்றும் அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த பாடசாலை முகாமைத்துவக் குழு (SMC) ஆகிய மூன்று கட்டமைப்புகள் ஸ்தாபிக்கப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளரின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (SDS) 4 தரப்பினர்:

  1. அதிபர் மற்றும் ஆசிரியர்கள்: அதிபர் பதவிவழியாக (Ex-officio) இச்சங்கத்தின் தலைவராவார்.
  2. பெற்றோர்கள் / சட்டரீதியான பாதுகாவலர்கள்: குறித்த வருடத்தில் பாடசாலை தினவரவு இடாப்பில் பதியப்பட்டுள்ள மாணவர்களின் தாய், தந்தை அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள்.
  3. பழைய மாணவர்கள்: பழைய மாணவர் சங்கச் சுற்றுநிருபத்தின் படி தெரிவு செய்யப்படும் பழைய மாணவ அங்கத்தவர்களின் எண்ணிக்கை மாணவர் தொகைக்கு ஏற்ப பின்வருமாறு அமையும்:
    • மாணவர் எண்ணிக்கை 1 – 500 வரை: 02 அங்கத்தவர்கள்
    • மாணவர் எண்ணிக்கை 501 – 1,000 வரை: 04 அங்கத்தவர்கள்
    • மாணவர் எண்ணிக்கை 1,001 – 2,000 வரை: 06 அங்கத்தவர்கள்
    • மாணவர் எண்ணிக்கை 2,001-க்கு மேல்: 08 அங்கத்தவர்கள்
  4. வலயக் கல்வி அலுவலகப் பிரதிநிதி: வழிகாட்டுபவர் என்ற வகையில் வலயக் கல்விப் பணிப்பாளர் அல்லது அவரால் பெயரிடப்படும் வலய/கோட்டக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர் ஒருவர்.
  • வருடாந்தப் பொதுக்கூட்டம் (மார்ச் 31-க்கு முன்): அதிபரால் சகல வருடங்களிலும் மார்ச் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னதாக வருடாந்தப் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு, முந்திய வருடக் கணக்கறிக்கை மற்றும் முன்னேற்ற மீளாய்வு அறிக்கைக்குச் சபையின் அனுமதி பெறப்பட வேண்டும்.
  • விசேட பொதுக்கூட்டம்: நிறைவேற்றுக் குழுவின் 2/3 பங்கினரின் வேண்டுகோளின் பேரிலோ அல்லது சங்க உறுப்பினர்களின் 1/3 பங்கினரின் வேண்டுகோளின் பேரிலோ அல்லது கல்வி அதிகாரிகளின் உத்தரவின் பேரிலோ அதிபரால் விசேட கூட்டத்தைக் கூட்ட முடியும்.
  • அங்கத்துவக் கட்டணம்: அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வலயப் பிரதிநிதி தவிர்ந்த ஏனைய அங்கத்தவர்களிடமிருந்து வருடத்திற்கு ரூ. 50.00-க்குக் குறையாதவாறும், ரூ. 600.00-க்கு மேற்படாதவாறும் அங்கத்துவப் பணம் அறவிடப்பட வேண்டும். ஒரு குடும்ப அலகிலிருந்து ஒரு உறுப்புரிமைக் கட்டணம் மாத்திரமே அறவிடப்பட வேண்டும்.

3. பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (பா.அ.நி.கு / SDEC) கட்டமைப்பு

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மார்ச் 31-க்கு முன் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டு, உத்தியோகத்தர்களின் பெயர், பதவி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மாதிரிக் கையொப்பத்துடன் கூடிய அறிக்கை மார்ச் 31-க்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளரின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட வேண்டும் (தேசிய பாடசாலையெனில் அதன் பிரதி கல்விப் பணிப்பாளர் - தேசிய பாடசாலைகள் பிரிவுக்கு அனுப்பப்பட வேண்டும்).

*(மொபைல் போனில் பார்ப்பவர்கள் அட்டவணையை இடது/வலது பக்கமாக நகர்த்திப் பார்க்கவும்)*

ஆசிரியர் பிரதிநிதிகள் (பொருளாளர் உட்பட) பெற்றோர் பிரதிநிதிகள் (செயலாளர் உட்பட)
• ஆசிரியர் தொகை 3 அல்லது குறைவு: அனைவரும் • மாணவர் எண்ணிக்கை 100 அல்லது குறைவு: 03 பேர்
• ஆசிரியர் தொகை 4 – 10 வரை: 03 பேர் • மாணவர் எண்ணிக்கை 101 – 500 வரை: 04 பேர்
• ஆசிரியர் தொகை 11 – 20 வரை: 04 பேர் • மாணவர் எண்ணிக்கை 501 – 1,000 வரை: 05 பேர்
• ஆசிரியர் தொகை 21 – 40 வரை: 05 பேர் • மாணவர் எண்ணிக்கை 1,001 – 1,500 வரை: 06 பேர்
• ஆசிரியர் தொகை 41 – 70 வரை: 06 பேர் • மாணவர் எண்ணிக்கை 1,501 – 2,000 வரை: 07 பேர்
• 71 – 100 வரை: 07 பேர் | 100-க்கு மேல்: 08 பேர் • மாணவர் எண்ணிக்கை 2,001-க்கு மேல்: 08 பேர்
  • தெரிவு விதிமுறைகள்: ஆசிரியர் பிரதிநிதிகள் நிரந்தர ஆசிரியர் குழாத்தின் 2/3 பங்கினர் சமூகமளித்த கூட்டத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும். பெற்றோர் பிரதிநிதிகள் ஆரம்பப் பிரிவு (1–5) மற்றும் இடைநிலைப் பிரிவு (6–13) இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்; இயலுமான சகல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர் பிரதிநிதிகளில் 75% ஆனோர் பழைய மாணவர் அல்லாத பெற்றோராக இருக்க வேண்டும். மேலும் பழைய மாணவர் இருவரும், வலயக் கல்வி அலுவலகப் பிரதிநிதி ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவர்.
  • பதவிகளும் பொறுப்புகளும்: தலைவர் (அதிபர் - பதவிவழியாக), செயலாளர் (பெற்றோரில் ஒருவர் - கூட்ட அறிக்கைகளைப் பக்க இலக்கமிடப்பட்ட CR புத்தகத்தில் எழுதிப் பேணுதல்), பொருளாளர் (ஆசிரியர் ஒருவர் - வங்கிக் கணக்கு, தொடரிலக்கமிடப்பட்ட வலய முத்திரையிடப்பட்ட பற்றுச்சீட்டுகள் மற்றும் நிதி ஆவணங்களைப் பேணுதல்; காசோலைகளில் தலைவர் முதலாவதாகவும் பொருளாளர் இரண்டாவதாகவும் ஒப்பமிடுதல்).
  • பதவிக்காலம் & மாதாந்தக் கூட்டம்: உத்தியோகபூர்வப் பதவிக்காலம் 2 வருடங்கள் (உச்சபட்சம் இரு தடவைகள், அதாவது 4 வருடங்கள் வரை மட்டுமே). குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு தடவை நிறைவேற்றுக் குழு கூட வேண்டும்; கூட்டத்தின் கோரம் (Quorum) தலைவர் தவிர்ந்த அங்கத்தவர்களில் 2/3 பங்காகும்.
அடுத்த பகுதியில் (பகுதி 02): பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் 10 பிரதான பணிகள், பாதீட்டு அனுமதி எல்லைகள் (ரூ. 500,000 / ரூ. 1 மில்லியன்), பாடசாலை முகாமைத்துவக் குழு (SMC) கட்டமைப்பு மற்றும் கணக்குப் பரிசோதனை முறைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
Education Circular 54/2023 Sri Lanka TAMIL, School Development Society SDS guidelines, School Development Executive Committee SDEC structure IN Tamil, Ministry of Education Sri Lanka circular 54 2023 Tamil, School based management Sri Lanka Tamil, SDS annual general meeting rules, SDEC committee members ratio Sri Lanka Tamil, Principal handbook school finance management Tamil

Post a Comment

0 Comments