>

ad

5. கலைத்திட்ட முகாமைத்துவம்

Principal Handbook Chapter 5

உள்ளடக்கம்

  • 5.1. அறிமுகம்
  • 5.2. கலைத்திட்ட வகைப்படுத்தல்.
  • 5.3. முறையான கலைத்திட்டம்.
    • 5.3.1. முறையான கலைத்திட்டத்தோடு இணைந்த பிரதான பணிகள்
    • 5.3.2. பாடக் கொள்கைகள்
    • 5.3.3. கலைத்திட்ட முகாமைத்துவ திட்டம்.
    • 5.3.4. கலைத்திட்ட முகாமைத்துவத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் அனுகூலங்கள்.
    • 5.3.5. கலைத்திட்ட அமுலாக்கத்தின் போது அதிபரின் பணிகள்
    • 5.3.6. ஆரம்பக் கல்வியில் முறையான கலைத்திட்டம்.
    • 5.3.7. இடைநிலைக் கல்வியில் முறையான கலைத்திட்டம்.
    • 5.3.8. இடைநிலைப் பிரிவில் கணிப்பீட்டுச் செயன்முறை.
    • 5.3.9. 13 ஆண்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டங்கள்.
  • 5.4. முறையில் கலைத்திட்டம் (Informal Curriculum)
    • 5.4.1 இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள்.
    • 5.4.2 பாடசாலை கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல்.
    • 5.4.3 மறைக் கலைத்திட்டம்.
  • 5.5. விசேடக் கல்வி மற்றும் உட்படுத்தல் கல்வி
  • 5.6. பாடசாலை கால அட்டவணை

5.1 அறிமுகம்

தேசிய குறிக்கோள்கள், அடிப்படைத் தேர்ச்சிகள் மற்றும் கல்விக்கொள்கைகளை இலக்காகக் கொண்டு பெற்றாரின் அபிலாஷைகள் மற்றும் சமூக வேண்டல்கள் என்பனவற்றை அடைந்து கொள்ளும் வகையில் பாடசாலையின் கலைத்திட்டத்தை முகாமைத்துவம் செய்தல் வேண்டும்.

மாணவர் தேர்ச்சி அடைவு மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக் கொணர்வதற்காக நடவடிக்கை எடுத்தல் என்பது கலைத்திட்ட முகாமைத்துவத்தினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மாணவர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்குகள் மற்றும் தகைமைகளின் அபிவிருத்தியினூடாக தேர்ச்சிகளைக் கட்டியெழுப்புதல் பாடசாலை உள்ளகத்தில் அல்லது வெளியில் ஆசிரியர் ஒருவருடன் அல்லது அவரின்றி நடைமுறைப்படுத்தக் கூடிய பாடசாலையினாலேயே திட்டமிட்டு முன்வைக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் கலைத்திட்டத்திற்குரியதாகும்.

இதனால், ஒவ்வொரு பாடசாலையிலும் அவ்வாறான செயற்பாடுகளின் தொகுதியுடன் பூரண கலைத்திட்டத்தை (Total Curriculum) நடைமுறைப்படுத்த வேண்டும்.

5.2 கலைத்திட்ட வகைப்படுத்துதல்

  • பூரண கலைத்திட்டம் (Total Curriculum)
  • முறையான கலைத்திட்டம் (Formal Curriculum)
  • முறையில் கலைத்திட்டம் (Informal Curriculum)
  • இணைக் கலைத்திட்டம் (Co-Curricular Curriculum)
  • மறைக் கலைத்திட்டம் (Hidden Curriculum)

5.3 முறையான கலைத்திட்டம்

கற்றல் மற்றும் கற்பித்தல் வசதிகளை பாடசாலையில் ஏற்படுத்துவதற்காக குறிக்கோள்கள், நோக்கங்கள், உள்ளடக்கம், கற்பித்தல் மூலோபாயங்கள், மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய கற்றல் மூலங்கள் என்பனவற்றை வழங்குகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட அனுபவத் தொகுதியே முறையான கலைத்திட்டமாகும்.

இதனை அமுல்படுத்தும்போது பாடவிதானம், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூல், பாடநூல்கள் மற்றும் சுற்றுநிருபங்களைப் போன்றே ஆசிரியரின் ஆக்கத்திறனையும் அனுபவங்களையும் பயன்படுத்துதல் அத்தியாவசியமாகின்றது.

யுனெஸ்கோ வரைவிலக்கணம் (2006):
"முறையான கலைத்திட்டம் எனப்படுவது குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்காக முறையாக தயாரிக்கப்பட்டுள்ள உள்ளடக்கம், கற்றல் அனுபவங்கள், கற்றலுக்கான வளங்கள் மற்றும் கணிப்பீட்டுச் செயன்முறை செயற்பாடொன்றுடன் பாடசாலையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிட்ட அடிப்படையிலான வேலைத்திட்டமொன்றாகும்."

5.3.1 முறையான கலைத்திட்டத்துடன் இணைந்த பிரதான பணிகள்

  • தேசிய கல்விக் குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சிகள் தொடர்பாக தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • காலத்துக்குக் காலம் வெளியிடப்படும் சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு ஏற்புடையதாக செயற்படுதல்.
  • முறையான கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக திட்டம் தயாரித்தல்.
  • உச்ச விளைதிறன் மற்றும் வினைத்திறனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கால அட்டவணையைத் தயாரித்தல்.
  • கலைத்திட்டம் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழகாட்டி நூல் தொடர்பாக தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • கற்றல் கற்பித்தலுக்கான வளங்களை விளைதிறன்மிக்க வகையில் பயன்படுத்துதல்.
  • செயன்முறைத் தொழிநுட்பச் செயற்பாடுகளுக்காக போதுமான அளவு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல்.
  • உரிய முறையில் கணிப்பீட்டுச் செயன்முறைச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் (மதிப்பீடு, ஒப்படைகள், பரீட்சைகள்).
  • அடைவு மட்டத்தை பகுப்பாய்வு செய்து தேவையான பரிகாரச் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல்.
  • கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்கள் கற்றுக் கொண்ட விடயங்களை மேலும் பிரயோக ரீதியில் அபிவிருத்திக்குரிய கற்றலை விரிவு படுத்தும் செயற்பாடுகள்/ வேலைத்திட்டங்கள்/ செயற்றிட்டங்கள் என்பனவற்றைத் திட்டமிடலும் நடைமுறைப்படுத்துதலும்.

5.3.2 பாட கொள்கைகள்

தேசிய கல்விக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக முறையான கலைத்திட்டத்துடன் பொருந்தும் வகையில் பாடசாலைக்கு உசிதமான பாட கொள்கையொன்றினை கட்டியெழுப்புதல் பாடசாலையின் பணியாகும்.

மாணவர்களின் கற்றல் அடைவைப் போன்றே தேர்ச்சி விருத்திக்குரிய செயற்பாடுகளுக்காக இயன்றளவு கவனத்தை பாட கொள்கையினுள் உட்படுத்த வேண்டியுள்ளது.

பாட கொள்கை எனப்படுவது மாணவர்களின் தேர்ச்சி விருத்தியை இலக்காகக் கொண்ட, உரிய சுற்றுநிருபங்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூல் என்பனவற்றின் எல்லைகளுக்குப் பொருந்தும் வகையில் அந்தந்த பாடசாலைக்கும் பாடங்களுக்கும் உசிதமான வகையில் பாடசாலையினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளின் தொகுதியாகும் (உதா: களப்பயணம், பாட தினங்களை நடாத்துதல், பரிகாரக் கற்பித்தல்...).

பாட கொள்கைகளைத் தயாரிக்கும் போது கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொள்ளுதல் வேண்டும்:

  • தேசிய கல்விக் குறிக்கோள்களும் பொதுத் தேர்ச்சிகளும்.
  • பாடசாலையின் நோக்கங்கள்.
  • மாணவர் தேர்ச்சி விருத்தி.
  • தனிநபர் நடத்தை விருத்தி.
  • சமூக அபிலாஷைகள் மற்றும் தொழிற் சந்தைக்குத் தேவையான வெளியீடுகள்.
  • கற்றலுக்கான வசதிகள் (பௌதீக மற்றும் மனித வளங்கள், கற்றல் கற்பித்தலுக்கான வளங்கள்...).
  • தொழில்நுட்ப முறையியல்கள்.
  • மாணவர் தேர்ச்சி விருத்திக்கான செயற்றிட்டங்கள்.
  • இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள்.
  • கணிப்பீடும் பரிகார வேலைத்திட்டங்களும்.

பாட கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளின்பால் கவனஞ் செலுத்துதல் முக்கியமாகின்றது:

  • நடைமுறையிலுள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து கொள்ளுதல்.
  • உத்தேச இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுதல்.
  • இலக்குகளின் அடைவுக்காக உபாய வழிமுறைகளை தயாரித்துக் கொள்ளுதல்.
  • செயற்றிட்டங்களைத் தயாரித்தல்.
  • அச் செயற்றிட்டங்களை விளைதிறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துதல்.
  • கண்காணித்தல்.

5.3.3 கலைத்திட்ட முகாமைத்துவத் திட்டம்

பாடசாலையில் நடைமுறையிலுள்ள பௌதீக மற்றும் மனித வளங்களைப் போன்றே நேரத்தையும் விளைதிறன்மிக்க வகையில் பிரயோகித்து உத்தேச இலக்கை நோக்கி அண்மிப்பதற்கு வினைத்திறன்மிக்க நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்காக கலைத்திட்ட முகாமைத்துவ திட்டம் தயாரிக்கப்படுகின்றது.

அதனூடாக கீழ்க் காணப்படும் நோக்கங்கள் அடைந்து கொள்ளப்பட வேண்டும்:

  • கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாடங்களுக்கு இடையில் தொகுப்பினை உருவாக்குதல்.
  • மாணவர்களின் உச்சபட்ச பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • மாணவர்களை கற்றலுக்கு ஊக்கப்படுத்துதல். (ஊக்கல்)
  • ஆசிரியர் அபிவிருத்தியும் மதிப்பீடும்.
  • வளங்களைப் பகிர்ந்தளித்தல், அவற்றின் பயன்பாட்டையும் வினைத்திறனையும் உயர்த்துதல்.
  • இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளை விளைதிறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துதல்.
  • பாடசாலையின் பண்புத்தரச் சுட்டியை உயர்த்திக் கொள்ளுதல்.

5.3.4 கலைத்திட்ட முகாமைத்துவத்தினால் பெற்றுக் கொள்ளப்படும் அனுகூலங்கள்

  • பாடசாலையின் கொள்கைகள் மற்றும் பாட கொள்கைகளுக்கிடையிலுள்ள தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள இயலுகின்றமை.
  • கலைத்திட்ட திட்டத்திற்கமைய உரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இயலுகின்றமை.
  • மாணவர் அடைவு மற்றும் ஆளுமை விருத்திக்கென சாதகமாக அமையும் கற்றல் சூழல் ஸ்தாபிக்கப்படுகின்றமை.
  • நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக வளங்களையும் நேரத்தையும் முகாமைத்துவம் செய்து கொள்ள இயலுகின்றமை.
  • குறைவான சாதனையை வெளிக்காட்டும் மாணவர்களின் செயலாற்றுகையை உயர்த்துதல்.
  • விசேட தேவைகளுள்ள மாணவர்கள் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தக் கூடியதாக உள்ளமையும் மீற்றிறன் மாணவர்களுக்கென கூடுதலான சந்தர்ப்பங்களை வாய்க்கச் செய்வதற்கு இயலுகின்றமையும்.
  • கண்காணிப்புப் பணிகளை வலுவுள்ளதாக்கிக் கொள்ள இயலுகின்றமை.
  • எதிர்கால வேலை உலகிற்கு ஏற்புடைய வெளியீட்டை பாடசாலையிலேயே உருவாக்குவதற்கு இயலுகின்றமை.
  • கலைத்திட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • சிறுவர் பாதுகாப்பு மற்றும் கரிசனைகள் தொடர்பாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுகின்றமை.

5.3.5 கலைத்திட்டத்தை அமுல்படுத்தும்போது அதிபரின் பணிகள்

  • கலைத்திட்டம் தொடர்பான தெளிவினைப் பெற்றுக் கொள்ளுதலும் ஏனையோருக்குத் தெளிவுப் படுத்துதலும்.
  • கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்குதல்.
  • கால அட்டவணையைத் தயாரித்து உரிய காலத்தில் பகிர்ந்தளித்தல்.
  • மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துதலும் உயர் செயலாற்றுகையைப் பெற்றுக் கொள்ள ஈடுபடச் செய்தலும்.
  • கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கென இடைநிலை முகாமையாளர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • உத்தேச கற்றல் பேற்று அடைவினை இலக்காகக் கொண்ட கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்குதல்.
  • உத்தேச இலக்கை அடைந்து கொள்வதற்காக தேவையான வசதிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல்.
  • கற்றல்-கற்பித்தலுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு ஊக்குவித்தல்.
  • அடைவு மட்ட பகுப்பாய்வுக்கு இணங்க பாட முன்னேற்றத்திற்காக ஆசிரியர்களை ஈடுபடுத்துதல்.
  • ஆசிரியர்களை தமது தொழில் அபிவிருத்திக்கும் நவீன சிறப்பான செயற்பாடுகளின் பயன்பாட்டுக்கும் ஊக்கப்படுத்துதல்.
  • கலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு தலைமைத்துவத்தை வழங்குதல்.
  • ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வை செய்தலும் செயலாற்றுகையை மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும்.
  • கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அனைத்து மாணவரையும் பங்குபடுத்திக் கொள்வதற்கு உசிதமான உபாயங்களை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களை ஊக்குவித்தல்.
  • தொடர்ச்சியான கற்றலுக்காக ஒவ்வொரு மாணவனதும் அடைவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தற்காலப்படுத்தப்பட்ட தகவல் முறைமையொன்றினை பேணுவதற்கு ஆசிரியர்களை உட்படுத்துதல்.
  • பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்.
  • பாட அபிவிருத்திக்குரிய தரவட்டங்களை நடாத்துதல்.
  • கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கலைத்திட்டம், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிநூல் மற்றும் பாடநூல்களின் தேவையை பூரத்தி செய்து கொள்ளுதலும் உரிய காலத்தினுள் பகிர்ந்தளித்தலும்.

5.3.6 ஆரம்பக் கல்வியில் முறையான கலைத்திட்டம்

இலங்கையில் ஆரம்பக் கல்வியானது 3 முதன்மை நிலைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

  • முதன்மை நிலை ஒன்று (தரம் 1 மற்றும் தரம் 2)
  • முதன்மை நிலை இரண்டு (தரம் 3 மற்றும் தரம் 4)
  • முதன்மை நிலை மூன்று (தரம் 5)

ஆரம்பக் கல்வியில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும் செயற்பாட்டு அடிப்படையிலானதுமான கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அதே வேளை ஆரம்ப முதன்மை நிலைகளின் இறுதியில் அடைந்து கொள்ள வேண்டிய தேர்ச்சிகள் அடங்கிய தொகுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத் தேர்ச்சிகள் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு பெயரிடப்பட்டுள்ளன:

  • அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் (Essential Learning Competencies)
  • எதிர்பார்க்கும் கற்றல் தேர்ச்சிகள் (Desired Learning Competencies)

ஒவ்வொரு முதன்மை நிலையையும் நிறைவு செய்யும் போதும் கட்டாயமாக பாண்டித்தியத்தை எய்த வேண்டிய தேர்ச்சிகளாவன அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் எனப்படுகின்றன. இத் தேர்ச்சிகளாவன எண்ணிக்கை அடிப்படையில் வெவ்வேறாக காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு முதன்மை நிலையிலும் உரிய அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் பாண்டித்தியத்தை எய்து கொள்ளுதல் எனக் கருதப்படுவது அடுத்த முதன் நிலைக்குப் பிரவேசிப்பதற்கான தகைமையைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதாகும்.

ஒட்டுமொத்த ஆரம்பக் கல்வி முதன்மை நிலைகளில் மாணவர் ஒருவர் பாண்டித்தியத்தை எய்து கொள்வதற்கான அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்து அம் மாணவர் கனிஷ்ட இடைநிலைப் பிரிவுக்கு பிரவேசிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தேர்ச்சிகள் பூரணப்படுத்தப்படுகின்றன.

எதிர்பார்க்கும் கற்றல் தேர்ச்சிகள் எனப்படுவது அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளுக்கு மேலதிகமாக கலைத்திட்ட உள்ளடக்கத்தில் காணப்படும் உயர் மட்டத்திலான தேர்ச்சிகளின் தொகுதியாகும்.

அனைத்து மாணவர்களையும் அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் பாண்டித்தியத்தை எய்தச் செய்வதும் ஆரம்பப் பிரிவு ஆசிரியரின் பொறுப்பாகும்.

5.3.6.1 ஆரம்பக் கல்வியில் முறையான கலைத்திட்டத்தை அமுல்படுத்துதல்

ஒட்டுமொத்த கலைத்திட்டத்தையும் அமுல்படுத்தும்போது கற்றல் அனுபவங்களை வழங்குவதற்கு கீழ்க் காணப்படும் முறையியல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்:

  1. திட்டமிட்ட அடிப்படையிலான விளையாட்டு மற்றும் விளையாட்டு வினோதச் செயற்பாடுகள்.
  2. செயற்பாடுகள்.
  3. எழுத்து வேலைகள்.

மேல் குறிப்பிடப்பட்ட முறையியல்களைப் பின்பற்றி கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும்:

  • தரம் ஒன்றில் உள்வாங்கப்படும் மாணவர்களை அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் நுழைவுத் தேர்ச்சிகளை இனங் காணுதலும் அதற்கிணங்க கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதலும்.
  • மூன்றாம் மற்றும் ஐந்தாந் தரங்களில் மாணவர்களின் நுழைவுத் தேர்ச்சிகளை இனங் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
  • ஒரு முதன்மை நிலைக்கென ஒரு ஆசிரியரை ஈடுபடுத்துதல்.
  • ஆரம்பக் கல்வி நிலைகளில் மாணவர்களுக்குப் பொருந்தக் கூடிய கற்றல் சூழலையும் கற்றலுக்கான சூழ்நிலையையும் (Learning Environment and Learning Climate) உருவாக்குதல்.
  • ஆரம்பப் பிரிவில் பௌதீக வளங்களை விளைதிறன் மிக்க வகையில் பயன்படுத்தி விளைதிறன்மிக்க கற்றல் கற்பித்தலுக்கான சூழலை வடிவமைத்துக் கொள்ளுதல்.
  • ஆரம்பக் கல்வி நிலைகளில் பிள்ளைகள் சுற்றாடலில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதால் அதற்கென பொருத்தமான வகையில் பாடசாலைச் சூழலொன்றினை உருவாக்கிக் கொள்ளுதல்.
  • வலுவான ஆரம்பக் கல்வி நிலைகளில் மாணவர் மத்தியில் ஆளுமை விருத்திக்கான அடித்தளமொன்றை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல்.
  • கவர்ச்சிகரமான, முறையானதும் நேர்த்தியானதுமான வகுப்பறையையும் பாடசாலைச் சுற்றுச் சூழலையும் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

5.3.6.2 ஆரம்பக் கல்விப் பிரிவில் கால அட்டவணையைத் தயாரித்தல்

ஆரம்ப நிலைகளில் பயன்படுத்தப்படுவது நெகிழ்வுத் தன்மையான கால அட்டவணையாகும். கால அட்டவணையைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு பாடத்திற்காகவும் ஒரு வாரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மணித்தியாலங்களின் எண்ணிக்கைத் தொடர்பாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

வகுப்பாசிரியர் அனைத்து பாடங்களையும் கற்பிக்கும் அதே வேளை தரம் (03) மூன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் ஆங்கில மொழி பாடத்திற்கென ஆங்கில மொழி பாட ஆசிரியர் ஒருவர் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும். இதற்கு மேலதிகமாக முதலாந் தரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் வாய் மொழி மூல ஆங்கிலத்தை விருத்தி செய்வதற்காக ஆங்கில மொழி ஆசிரியரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுதல் பொருத்தமாக அமையும்.

சுற்றுநிருப விதிகளுக்கு அமைவாக செயற்பட்டு மகிழ்வோம் வேலைத்திட்டம், விருப்புக் கலைத்திட்டம் மற்றும் இணைக்கலைத்திட்ட வேலைத்திட்டங்களுக்காக கால அட்டவணையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

5.3.6.3 ஆரம்பக் கல்விப் பிரிவில் இணைக் கலைத்திட்ட வேலைத்திட்டங்கள்

அழகியல்சார் வேலைத்திட்டங்கள், சுற்றாடல் வேலைத்திட்டங்கள், ஆக்கச் செயற்பாடுகள், விளையாட்டுகள், சமய மற்றும் விழுமிய வேலைத்திட்டங்கள், சங்கங்கள் கழகங்கள் போன்ற செயற்பாடுகள் பல இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளாக ஆரம்பப் பிரிவின் கலைத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது. கலைத்திட்டத்திற்கமைவாக ஆசிரியர்கள் அச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும்.

5.3.6.4 ஆரம்பக் கல்விப் பிரிவில் கலைத்திட்டத்தைக் கணிப்பீடு செய்தல்

  • முதன்மை நிலை ஒன்றில் முறைசாரா கணிப்பீட்டு முறையியல்களின்பால் (வாய்மொழி மூல, அவதானித்தல்...) கூடுதலான கவனஞ் செலுத்தப்படுதல்.
  • இரண்டாம் மற்றும் மூன்றாம் முதன்மை நிலைகளுக்கென பொருத்தமான கணிப்பீட்டு முறையியல்களைப் பயன்படுத்துதல்.
  • செயற்பட்டு மகிழ்வோம் வேலைத்திட்டத்திற்கமைவாக 4 மற்றும் 5 ஆந் தரங்களில் மாணவர்களின் உடல் தகுதியை பரீட்சித்தல்.
  • கணிப்பீட்டு அறிக்கைகள், மாணவர் செயலாற்றுகைக் கோவை, சுருக்கக் குறிப்புகளை பேணுதல் மற்றும் அடுத்த முதன்மை நிலைக்கு அவற்றை வழங்குதல்.

இது தொடர்பாக மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கு ஆரம்பக் கல்வி ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சி நூல் மற்றும் சுற்றுநிருபங்களினூடாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.


5.3.7 இடைநிலைக் கல்வியில் முறையான கலைத்திட்டம்

தேசிய குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சிகளை அடைந்து கொள்வதற்காக 6-13 வரையான வகுப்புகளுக்கு முறையான கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10-11 மற்றும் 12-13 வகுப்புகளில் முறையே க.பொ.த (சா.த) மற்றும் க.பொ.த (உ.த) பரீட்சைகளை இலக்காகக் கொண்டும் கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

5.3.7.1 6 - 9 வகுப்புகளுக்கான கனிஷ்ட இடைநிலைக் கலைத்திட்டம்

கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பொதுப் பாடங்களைக் கற்க வேண்டும்.

பிரதான பாடங்கள்:

  • தாய்மொழி (சிங்களம்/ தமிழ்)
  • இரண்டாம் மொழி (தமிழ்/ சிங்களம்)
  • ஆங்கிலம்
  • விஞ்ஞானம்
  • கணிதம்
  • வரலாறு
  • சமயம்
  • புவியியல் மற்றும் குடியுரிமைக் கல்வி
  • சுகாதாரமும் உடற்கல்வியும்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்
  • செயன்முறைத் தொழிநுட்பத் திறன்கள் (PTS)
  • அழகியற் பாடங்கள் (சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம் மற்றும் அரங்கியல், சித்திரமும் இலக்கியமும்)

5.3.7.2 10 - 11 வகுப்புகளுக்கான இடைநிலைக் கலைத்திட்டம்

இப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் 6 பிரதான பாடங்களையும் 3 தொகுதிப் பாடங்களையும் கற்றல் வேண்டும்.

கட்டாயப் பாடங்கள்:

  1. சமயம்
  2. தாய்மொழி
  3. ஆங்கிலம்
  4. கணிதம்
  5. விஞ்ஞானம்
  6. வரலாறு

தொகுதிப் பாடங்கள்:

  • தொகுதி 1 பாடங்கள்
  • தொகுதி 2 பாடங்கள்
  • தொகுதி 3 பாடங்கள்

5.3.7.3 12 - 13 வகுப்புகளுக்கான கலைத்திட்டம் (உயர் தரம்)

இப் பிரிவின் கீழ் 4 பிரதான பாடத் துறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

  • விஞ்ஞானப் பிரிவு (உயிரியல் விஞ்ஞானம்/ பௌதீக விஞ்ஞானம்)
  • தொழில்நுட்பப் பிரிவு (உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பவியல்/ பொறியியல் தொழில்நுட்பவியல்)
  • கலைப் பிரிவு
  • வர்த்தகப் பிரிவு

மேல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடத் துறைகளிலிருந்தும் 3 பாடங்களை தெரிவு செய்து கற்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக,

  • சாதாரண பொதுப் பரீட்சை (Common General Test)
  • பொது ஆங்கிலம் (General English)

ஆகிய பாடங்களுக்கு தோற்றுதல் வேண்டும்.

அத்துடன் தகவல் தொழில்நுட்ப பாடத்தை (GIT - General Information Technology) தரம் 12 இல் கற்றல் அவசியமாகும்.

5.3.8 இடைநிலைப் பிரிவில் கணிப்பீட்டுச் செயன்முறை

தேசிய மட்ட பரீட்சைகளுக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் அதே வேளை மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தை உயர்த்துவதற்காக கணிப்பீட்டுச் செயன்முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

5.3.8.1 பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டுச் செயன்முறை (SBA)

கற்றல் கற்பித்தல் செயன்முறையின் போதே மாணவர்களின் அடைவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள 5 பிரதான விடயங்களின் அடிப்படையில் கணிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது:

  1. கருத்து வெளிப்பாட்டுத் திறன்
  2. வினாக்களுக்கு விடையளித்தல்
  3. ஒப்படை
  4. குழுச் செயற்பாடு
  5. பிரயோகத் திறன்

5.3.8.2 தவணைக்கான மதிப்பீடு

ஒரு தவணைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பாட அலகுகளை மாணவர்கள் எவ்வகையில் கிரகித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்வதற்காக ஒவ்வொரு தவணை இறுதியிலும் மதிப்பீடு நடாத்தப்படுகின்றது. இம் மதிப்பீட்டின் புள்ளிகளைப் பகுப்பாய்வு செய்து மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்திக் கொள்வதற்கான பரிகாரக் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

5.3.9 13 ஆண்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டங்கள்

க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கும் மற்றும் க.பொ.த (உ.த) பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கென இக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது "தொழிற்கல்விப் பாடத்திட்டம்" எனவும் அழைக்கப்படுகின்றது.

5.3.9.1 பிரதான குறிக்கோள்கள்

  • பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் அனைவருக்கும் தொழில் தகைமையைப் பெற்றுக் கொடுத்தல்.
  • சமூக பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான மனித வளத்தை உருவாக்குதல்.
  • வேலை உலகின் தேவைகளுக்கேற்ப திறன்களைக் கொண்டோரை உருவாக்குதல்.
  • தொழில் வாய்ப்பற்றோர் வீதத்தைக் குறைத்தல்.

5.3.9.2 வேலைத்திட்டங்களினூடாக பெற்றுக் கொள்ளப்படும் சமூக பொருளாதார அனுகூலங்கள்

  • பயிற்சி பெற்ற திறமையான தொழிலாளர்களை உருவாக்குதல்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • வறுமையை ஒழித்தல்.
  • நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல்.

5.3.9.3 13 வருட தொடருறு கல்வி வேலைத்திட்டத்தில் அதிபரின் பணிகள்

  • வேலைத்திட்டம் தொடர்பாக பெற்றார் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல்.
  • மாணவர்களைத் தெரிவு செய்தல் மற்றும் வழிகாட்டல்.
  • வளங்களை முகாமைத்துவம் செய்தல்.
  • கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைக் கண்காணித்தல்.
  • தொழில் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
  • மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

5.4 முறையில் கலைத்திட்டம் (Informal Curriculum)

5.4.1 இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள்

முறையான கலைத்திட்டத்திற்கு (வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு) புறம்பாக பாடசாலையில் மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் எனப்படும்.

5.4.1.1 பாடசாலையொன்றில் நடைமுறைப்படுத்தக் கூடிய இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளுக்குரிய துறைகள்

  • பாட ரீதியான கழகங்கள்/சங்கங்கள் (விஞ்ஞான சங்கம், வர்த்தக சங்கம்...)
  • சேவை மற்றும் நலனோம்பல் கழகங்கள் (சாரணர், செஞ்சிலுவைச் சங்கம், சூழல் முன்னோடி...)
  • அழகியற் செயற்பாடுகள் (இசை, நடனம், நாடகம், சித்திரம்...)
  • விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குழு விளையாட்டுக்கள்
  • சமய வழிபாடுகள் மற்றும் விழாக்கள்
  • சிரமதானப் பணிகள்
  • தலைமைத்துவப் பயிற்சி முகாம்கள்
  • கண்காட்சிகள் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள்

5.4.1.2 பல்வேறு போட்டிகள், பயிற்சி முகாம்கள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றில் மாணவர்களை பங்கேற்கச் செய்தல்

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது அவசியமாகும். வலய, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிபர் மேற்கொள்ள வேண்டும்.

5.4.2 பாடசாலை கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல்

பாடவிதானத்துடன் தொடர்புடைய விடயங்களை நேரில் கண்டு அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கல்விச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கல்விச் சுற்றுலாக்கள் தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 1982.06.23 ஆந் திகதிய 2/திரிவ்பா/49 என்ற இலக்கமுடைய கடிதத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க செயலாற்ற வேண்டும்.

  • கல்விக் களச் சுற்றுலாக்களின்போது கல்விச் சுற்றுலாக்களுக்கு மேலதிகமாக மேல் குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • கல்விக் களச் சுற்றுலாக்களின்போது தேவை, பாட அலகுகள் மற்றும் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளுடன் காணப்படும் தொடர்பு என்பன தெளிவுப்படுத்திக் காட்டப்பட வேண்டும்.
  • கல்விச் சுற்றுலா ஒன்றை நிறைவு செய்ததன் பின்னர் ஒட்டுமொத்த அறிக்கையையும் வரவு செலவு அறிக்கையையும் கோட்டக் கல்விப் பணிமனை/வலயக் கல்விப் பணிமனைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

5.4.2.1 சுற்றுலா செல்வதற்காக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • கோரல் கடிதம்/உரிய படிவம்.
  • சுற்றுலாவில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றார் மற்றும் ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்.
  • வரவு செலவு மதிப்பீடு.
  • பெற்றாரின் விருப்பம் அடங்கிய கடிதங்கள்.
  • வாகனத்தின் தகுதி தொடர்பான கடிதங்கள், முழுமையான காப்புறுதிச் சான்றிதழ், வருமான உத்தரவுப் பத்திரம், சாரதி மற்றும் உதவியாளரின் உத்தரவுப் பத்திரங்கள்.
  • பிரயாண வழி குறிக்கப்பட்ட வரைபடம்.
  • நிறுவனங்களைப் பார்வையிடுவதாயின் அதற்கான அனுமதிக் கடிதங்கள்.
  • தங்குமிட வசதிகள் தொடர்பான விபரங்கள்.
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை.

5.4.3 மறைக் கலைத்திட்டம்

பாடசாலையின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள் காரணமாக அவர்கள் மத்தியில் உறுதிப்படுத்தப்படுகின்ற முக்கியத்துவங்கள் மற்றும் ஒருங்கிசைவுத் தொகுதிகள் என்பன மறைக் கல்வியென கருதலாம். மறைக் கல்வியினுள் மாணவர்களின் சமநிலை ஆளுமைக்குத் தேவையான குணாம்சங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. மறைக்கல்வியுடன் தொடர்புடைய தேர்ச்சிகளை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அதிபர்கள் தொடர்ச்சியாக கவனஞ் செலுத்த வேண்டும்.

பாடசாலையினுள் நடைமுறைப்படுத்தக் கூடிய மறைக் கலைத்திட்டத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கான உதாரணங்கள்:-

  • பாடசாலைக்குக் கௌரவம் செலுத்துவதற்காக பல்வேறு முறையியல்களை கடைபிடித்தல்
  • அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்துக் கதைத்தல்
  • பாடசாலையினுள் சமய வழிபாடுகளில் ஈடுபடுதல்
  • பாடசாலைக்கு வருகைத் தருதலும் வெளியேறுதலும்

5.4.3.1 மறைக்கலைத்திட்டத்தின் முக்கியத்துவமும் அனுகூலங்களும்

வலுவான மறைக் கலைத்திட்டத்தினூடாக மாணவர் மத்தியில் மென் திறன்கள் விருத்தியடைகின்றன. மென் திறன்கள் விருத்தி என்பதால் கருதப்படுவது தனிநபரொருவரின் சிந்தனைக் கிளர்ச்சிக்கான நுண்மதி விருத்தியாகும். இதன்போது ஆளிடைத் தொடர்பு, சமூக மற்றும் தொடர்பாடல் திறன் விருத்தி, நேர் மற்றும் நெகிழ்வுத் தன்மையான உணர்வு போன்ற திறன்கள் கட்டியெழுப்பப்படுவதாகும்.

மாணவர் ஒருவரில் விருத்தி செய்யப்பட வேண்டிய பிரதான மென் திறன்கள் சில கீழே காட்டப்பட்டுள்ளன.

  • நேர் சிந்தனை
  • சவால்களுக்கு முகங் கொடுத்தலும் சகிப்புத் தன்மையும்
  • தீரமானமெடுக்கும் ஆற்றல்
  • தொடர்பாடல் திறன்கள்
  • நெகிழ்வுத் தன்மை
  • சுய ஊக்கல்
  • தலைமைத்துவத் திறன்கள்
  • பொறுப்பும் வகைகூறலும்
  • குழு உணர்வு
  • பிரச்சினைகளைத் தீர்த்தலும் முரண்பாட்டு முகாமைத்துவமும்
  • தன்னம்பிக்கையும் சுய ஒழுக்கமும்
  • சமூக முக்கியத்துவங்கள், பல்வகைமைய ஏற்றுக் கொள்ளுதலும் மதித்தலும். பரஸ்பர நேயம் மற்றும் கௌரவம் ஏற்படும் வகையில் செயலாற்றுதல்.

5.5 விசேடக் கல்வியும் உட்படுத்தல் கல்வியும்

உட்படுத்தல் கல்வியினூடாக இடம்பெறுவது அனைவருக்கும் கல்வி எனும் வாய்ப்பினை யதார்த்தமாக்கிக் கொள்வதாகும். அனைத்து வரைவிலக்கணங்களிலும் கூறப்படுவதாவது மேம்படுத்தப்பட்ட சமூகம்சார் மற்றும் கற்றல் வாய்ப்பினை சம வயது பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் அனைத்து செயற்பாடுகளுடனும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குதல் என்பதாகும்.

உட்படுத்தல் கல்வியின் கருப்பொருளாவது அனைவருக்கும் கற்பதற்கான உரிமை உண்டு என்பதன் கருத்தாகும். அனைத்து பிள்ளைகளையும் சாதாரண வகுப்பறையினுள் பிள்ளை மிகவும் விரும்பும் பாங்கு, கற்றல் பாங்கு மற்றும் மூலோபாயங்களில் பிள்ளையின் பல்வகைமைக்கு ஏற்புடைய கற்றலைத் திட்டமிடுவதனூடாக கல்வியை வழங்குதல் என்பது உட்படுத்தல் கல்வியாகும்.

உட்படுத்தல் கல்வி எதற்காக?

  • பாடசாலைக்கு அனுமதிக்கப்படாத பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதித்து கல்வி உரிமையை உறுதிப்படுத்துதல்.
  • விசேடக் கல்வித் தேவைகள் உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு உள்வாங்கி அவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துதல்.
  • பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதிப்படுத்துதல்.

கல்விச் செயற்பாடுகளிலுள்ள அனைத்து நடைமுறைகளுக்கும் சாதாரணமான வகையில் பிரவேசிப்பதற்கான வாய்பினை அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் அதிபர் உட்பட அனைவரதும் பொறுப்பாகும். இதன்போது விசேடத் தேவைகளுள்ள பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதைப் போன்றே விசேடக் கல்விப் பிரிவினுள் கற்றலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதைப் போன்றே சாதாரண வகுப்பறைகளுக்கு மேற்கொள்ளுதல் வேண்டும்.

5.6 பாடசாலை கால அட்டவணை

கால அட்டவணை பாடசாலையின் செயற்பாடுகளை பிரதிபலிக்கும் சட்டகப்படுத்தப்பட்ட வேலை ஒழுங்காக உள்ளதோடு அது பாடசாலையின் நோக்கங்களுக்காக பாடசாலையை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப்படும் உபகரணமாகக் கருத முடியும். (H.G.Stead)

கால அட்டவணை எனப்படுவது பாடசாலையொன்றின் இரண்டாம் கடிகாரமாகும். (Mohiyddin)

கால அட்டவணையினூடாக பல தகவல்கள் வழங்கப்படுகின்றன. அவையாவன, பாடசாலையின் ஒவ்வொரு பாடமும் ஆரம்பிக்கும் நேரம், நிறைவுபெறும் நேரம், இடைவேளை, பல்வேறு பாடங்கள், மற்றும் அப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுடைய பெயர்கள், இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளுக்காக நேர ஒதுக்கீடு போன்ற தகவல்கள் அவற்றில் அடங்குகின்றன.

பாடசாலையிலுள்ள கால அட்டவணைகளில் பல வகைகள் உள்ளதோடு அவை ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் தொடர்புடையவை.

1. பிரதான கால அட்டவணை (Master time table/General time table)
இதனூடாக வாரத்தின் அனைத்துத் தினங்களிலும் பாடசாலையின் ஒட்டுமொத்த பணிகள் தொடர்பான திட்டம் தெளிவுப்படுத்தப்படுகின்றது. அது ஒவ்வொரு வகுப்பிற்காகவும் தாக்கம் செலுத்தும் கால அட்டவணைகளின் கூட்டாகும்.

2. வகுப்பு கால அட்டவணை (Class time table)
இது ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடங்களைக் கற்பித்தல் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரியவாறு வாரத்திற்காக அன்றாடம் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை உள்ளடக்கிய கால அட்டவணையாகும்.

3. ஆசிரியர்களுக்கான கால அட்டவணை (Teachers time table)
ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்படுகின்ற, அவர்களது பணிகளை அன்றாடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட கால அட்டவணையாகும்.

4. பதில் கால அட்டவணை (Relief time table)
ஆசிரியர்கள் வருகைத் தராத சந்தர்ப்பங்களில் அவ் ஆசிரியர்களுக்குரிய கற்பித்தல்/ செயற்பாட்டுக் காலத்தினுள் அப் பாடங்களை இழப்பீடு செய்வதற்காக வேறொரு ஆசிரியரை நியமித்து தயாரிக்கப்படுகின்ற கால அட்டவணையாகும். இதை அன்றாடம் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தயாரிக்கப்பட வேண்டியதோடு உரிய ஆசிரியர்களுக்குப் பதிலாக உரிய காலத்தினுள் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்காக பாடசாலை நிறுவாகத்தினால் முன்மொழியப்படுகின்ற பணிகளின் திட்டமாகும்.

மேல் குறிப்பிடப்பட்ட கால அட்டவணைகளுக்கு மேலதிகமாக விசேட சந்தர்ப்பங்களுக்காக கீழ்க் காணப்படும் அடிப்படையில் பல்வேறு கால அட்டவணைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

  • போட்டிகளுக்கான கால அட்டவணை: இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், அழகியல் போன்ற துறைகளில் போட்டிகளை நடாத்தும் சந்தர்ப்பங்களுக்காக தயாரிக்கப்படும் திட்டங்கள்.
  • இணைக்கலைத்திட்ட கால அட்டவணை: வாரத்தில்/மாதத்தில் பாடசாலையில் பொதுவான கற்பித்தல் நேரத்திற்கு புறம்பாக இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள திட்டம்.
  • பரிகார வேலைத்திட்டங்களுக்கான கால அட்டவணை: அடைவு மட்ட பகுப்பாய்வுகளுக்கு அமைய குறைந்த அடைவு மட்டத்துடனான பிள்ளைகளின் அடைவு மட்ட விருத்திக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள திட்டம்.

கால அட்டவணையைத் தயாரித்தல் என்பது மிகவும் கவனத்துடன் மேற் கொள்ளப்பட வேண்டிய பணியாகும். கால அட்டவணையைத் தயாரிக்கும் போது பல்வேறு காரணிகள் தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும். பாடங்களுக்காக பாடவேளைகளை ஒதுக்குதல் தொடர்பான அறிவுறுத்தல்கள்/ சுற்றுநிருபங்களைப் போன்றே பாடங்களின் தன்மைகள் மற்றும் பல்வகைமை, ஆசிரியர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் போதுமான அளவு உள்ளனவா, மாணவர்களின் ஆற்றல்கள்/விருப்புகள், இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள், பாடசாலையின் பௌதீகச் சூழல்/அமைவிடம் மற்றும் பாடசாலையில் காணப்படும் வசதிகள் போன்ற காரணிகளை கால அட்டவணையைத் தயாரிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

தகவல் தொழில் நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி பாடசாலைக் கால அட்டவணையை இலகுவாக தயாரித்துக் கொள்வதற்காக தற்போது மென் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (கால அட்டவணைத் தயாரித்தல் தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 01/2016 மற்றும் 2016.01.07 திகதிய பாடசாலையில் இருக்க வேண்டிய பணிக்குழுவை நிர்ணயித்துக் கொள்வதற்கான சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்)

Post a Comment

0 Comments